கம்பத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்


கம்பத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 20 Jan 2019 3:45 AM IST (Updated: 20 Jan 2019 3:54 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம்,

கம்பத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின்படி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காமாட்சி கவுடர் நகர், முகைதீன் ஆண்டவர் புரம், நந்தகோபால்சாமி நகர், வாரச்சந்தை, ஆங்கூர்பாளையம் சாலையில் உள்ள பழைய குப்பை கிடங்கு ஆகிய பகுதியில் சேகரமாகும் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் திட்டப்பணி செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஒரு சில இடங்களில் பணிகள் முடிவடைந்துள்ளன. சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் தொடங்கவில்லை.

இந்நிலையில் கம்பம் 3-வது வார்டு வாரச்சந்தை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணி தொடங்கப்பட்டது. இதன் அருகில் குடியிருப்புகள், ஆரம்பசுகாதார நிலையம், வாரச்சந்தை, பள்ளிக்கூடம் மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது. இப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்படுவது மட்டுமல்லாமல் தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது என பொதுமக்கள் கருதினர்.

எனவே நகராட்சி நிர்வாகம் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கோரி பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தினர். இதனால் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

இந்நிலையில் நேற்று மீண்டும் கட்டுமான பணிகள் நடைபெற்றது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி கட்டுமான பணிகளை நிறுத்தக்கோரி அந்த இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்திற்கு நகராட்சி கமிஷனர் சங்கரன், சுகாதார அலுவலர் சுருளிநாதன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அரசு உத்தரவின் பேரில் தான் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. எனவே கட்டுமான பணிகளை யாரும் தடுத்து நிறுத்தக்கூடாது என்று கூறிவிட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் குறிக்கோளாக இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த கம்பம் வடக்கு போலீசார் அதிகாரி களையும், பொதுமக்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story