நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ - புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதி


நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ - புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 20 Jan 2019 4:15 AM IST (Updated: 20 Jan 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் தீ பற்றி எரிவதால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பீச்ரோடு சந்திப்பு அருகே வலம்புரிவிளையில் குப்பை கிடங்கு உள்ளது. சுமார் 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து வரும் துர்நாற்றத்தால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். இதனால் இந்த குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. மேலும் இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதும் அதை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைப் பதும் தொடர் கதை ஆகி இருக்கிறது.

இந்த நிலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே நாகர் கோவில் தீயணைப்பு நிலையத் துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் நாகர்கோவில் நிலைய அதிகாரி துறை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். ஆனால் குபுகுபுவென தீ பற்றி எரிந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் தீயை கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் தக்கலை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்தன. சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அதாவது காலை 7 மணி அளவில் தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் குப்பை குவியலின் அடிப்பகுதியில் தீக்கங்குகள் இருந்தன. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு குப்பைகளை கிளறிவிட்டு தீயை அணைத்தனர்.

ஆனால் குப்பை கிடங்கில் ஒரு பகுதியில் தீயை அணைப்பதற்குள் வேறு பகுதிக்கு தீ பரவியது. இதன் காரணமாக தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக குப்பைக் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பு அறை சேதம் அடைந்திருந்தது.

மேலும் குப்பைகளில் தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். பெரும்பாலானோர் வெளியே வர இயலாமல் வீட்டிலேயே முடங்கினர்.


Next Story