திருச்சி மாநகரில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்- குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்


திருச்சி மாநகரில் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்- குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
x
தினத்தந்தி 19 Jan 2019 10:45 PM GMT (Updated: 19 Jan 2019 11:54 PM GMT)

திருச்சி மாநகரில் 32 இடங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதையும், குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையையும் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

திருச்சி,

திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகர காவல்துறை சார்பில், ஜமால் முகமது கல்லூரியின் நன்கொடை நிதி ரூ.10 லட்சத்தில் 32 இடங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு (சி.சி.டி.வி) கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சியும் மற்றும் திருச்சி ஜோசப் க ண் ஆஸ்பத்திரி சார்பில் ரூ.9 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். ரத்தினவேல் எம்.பி., மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கியும், குளிரூட்டப்பட்ட நிழற்குடையை திறந்தும் வைத்தனர்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேசியதாவது:-

திருச்சி மாவட்ட நிர்வாகமும், மாநகர போலீசும் குற்றங்களை தடுப்பதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. திருச்சி மாநகரில் 1,086 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதில் 600 கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மிக விரைவில் பொருத்தப்படும். கண் காணிப்பு கேமரா பொருத்தப்படுவதால் திருச்சி மாநகரை குற்றமே இல்லாத மாநகரமாக உருவாக்க முடியும்.

சிறு தவறு கூட நடைபெறாமல் இருக்கத்தான் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் திருச்சிதான் கண் காணிப்பு கேமரா பொருத்தப்பட்டதில் முதல் எடுத்துக்காட்டு. கேமாராக்கள் அனைத்தும் கண்டோன்மெண்ட் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகள் பொருட்களை களவாடுவது குறையும். குற்றத்தை தடுக்க முடியும்.

மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் என்னிடம் அண்ணா விளையாட்டரங்கில் புதிய கபடி மைதானம் அமைக்க வேண்டும் என்று கேட்டார்கள். இந்த அண்ணா விளையாட்டரங்கம் என்னுடைய கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்டபட்டது. எனவே வரக்கூடிய மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அண்ணா விளையாட்டரங்கில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கபடி மைதானத்தின் முழுச்செலவையும் ஏற்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், ஜமால் முகமது கல்லூரி செயலர் காஜா நஜீமுதீன், ஜோசப் கண் மருத்துவமனை உதவி இயக்குனர் டாக்டர் அகிலன் அருண்குமார், போலீஸ் உதவி கமிஷனர் (நுண்ணறிவு பிரிவு) கபிலன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி மற்றும் கூட்டுறவு சங்கதலைவர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story