2–வது கட்டமாக கணக்கெடுப்பு: குமரி வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் கண்டுபிடிப்பு


2–வது கட்டமாக கணக்கெடுப்பு: குமரி வனப்பகுதியில் அரிய வகை பறவைகள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 20 Jan 2019 11:00 PM GMT (Updated: 20 Jan 2019 4:06 PM GMT)

குமரி மாவட்டத்தில் 2–வது கட்டமாக நடந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியின்போது அரிய வகை பறவைகள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதே போல இந்த ஆண்டும் பறவைகள் கணக்கெடுப்பு பணி 3 கட்டமாக நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது.

இந்த நிலையில் 2–வது கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று நடந்தது. அதாவது வனப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளை நேரில் சென்று பார்த்து கணக்கெடுத்தனர். இதற்காக மாவட்ட வன அதிகாரி ஆனந்த் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு குழுக்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் வனத்துறையினர் இருந்தனர்.

இந்த குழுவினர் மாவட்டத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிலாமலை, வீரப்புலி, வேளிமலை, கோதையாறு மற்றும் மகேந்திரகிரி ஆகிய வனப்பகுதிகளுக்கு சென்று பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். காட்டின் பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று பறவைகளை கணக்கெடுத்தார்கள். அப்போது தொலை தூரத்தில் இருக்கும் பறவைகளை பார்பதற்காக நவீன ரக தொலை நோக்கி பயன்படுத்தப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த பணி காலை 10 மணி வரை நடந்தது. கணக்கெடுப்பின்போது மகேந்திரகிரி வனப்பகுதியில் இருவாச்சி பறவைகள் அதிகம் தென்பட்டுள்ளன.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இந்த வகை பறவைகளுக்கு பெரிய வாய் இருக்கும். பார்ப்பதற்கு வாத்து போன்று காட்சி அளிக்கும். இவை பசுமையான வனப்பகுதிகளில் தான் அதிகம் வாழும். பெரிய மலை உச்சியில் உள்ள மரங்களில் தான் கூடு கட்டி முட்டையிடும். அதிலும் இந்த வகை பறவைகளுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏன் எனில் இவை தன் இறகுகளை வைத்து கூடு கட்டும். அதாவது இறகுகளை தன் அலகால் கொத்தி எடுத்து கூடு கட்டுகிறது. இந்த வகை பறவைகள் தற்போது குமரி மாவட்ட வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வசிக்கின்றன. இதுபோக தோட்ட கள்ளன், பச்சை சிட்டு, நீலச்சிட்டு உள்ளிட்ட அரிய வகை பறவைகளும் கணக்கெடுப்பின்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. வனப்பகுதிகளில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பறவைகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து இருக்கிறது’’ என்றார்.

இதைத் தொடர்ந்து 3–ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பணி விரைவில் நடைபெற உள்ளது. அப்போது நீர் நிலைகளில் வசிக்கும் பறவைகளையும், வனப்பகுதிகளில் வசிக்கும் பறவைகளையும் ஒரே நாளில் கணக்கெடுப்பார்கள். இந்த பணிகள் முடிந்த பிறகு தான் மாவட்டம் முழுவதும் எத்தனை வகை பறவைகள் வசிக்கின்றன என்ற விவரம் தெரியவரும்.

Next Story