சென்னை மருத்துவக்கல்லூரியில் 1969-ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தனர்


சென்னை மருத்துவக்கல்லூரியில் 1969-ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தனர்
x
தினத்தந்தி 21 Jan 2019 3:30 AM IST (Updated: 21 Jan 2019 12:00 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மருத்துவக்கல்லூரியில் 1969-ம் ஆண்டு படித்த மாணவர்கள் நேற்று சந்தித்தனர். அப்போது கல்லூரி நாட்களை எண்ணி நினைவு கூர்ந்தனர்.

சென்னை,

இந்தியாவின் பழமையான மருத்துவக்கல்லூரிகளில் ஒன்றாகவும், சென்னையின் முக்கியமான அடையாளமாகவும் விளங்குவது சென்னை மருத்துவக்கல்லூரி (எம்.எம்.சி) ஆகும். இங்கு 1969-ம் ஆண்டு படித்த மாணவர்கள் ‘கிளாஸ் ஆப் 69’ என்று ஒரு சங்கத்தை உருவாக்கினர். இந்த சங்கம் உருவாக்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் கடந்துவிட்டது.

இதையொட்டி ‘கிளாஸ் ஆப் 69’ சங்கத்தின் பொன் விழாவையொட்டி, சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் ‘ரெட் பில்டிங்’ கட்டிடத்தில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் மாணவ-மாணவிகள், அவர்களின் கணவன்- மனைவிமார்கள் என 150-க் கும் மேற்பட்டோர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நேற்று திரண்டனர். ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அனைவரும் ஒரே நிற ஆடையிலும், அடையாள அட்டையுடனும் வந்திருந்தனர்.

விழாவுக்கு, ‘கிளாஸ் ஆப் 69’ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நிறுவன தலைவர் டாக்டர் கே.ரவி, செயலாளர் டாக்டர் கே.பிரேம்ராஜ், பொருளாளர் டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவுக்கு 1969-ம் ஆண்டு சென்னை மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர்களாக பணியாற்றிய டாக்டர்கள் ஜி.ரங்கநாதன், நம்மாழ்வார், ரத்தினசபாபதி, ஸ்ரீராம், நம்பி, சொக்கலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, விட்டல் ஆகியோரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். விழாவில், பேராசிரியர்கள் 8 பேரையும் ‘கிளாஸ் ஆப் 69’ சங்க நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தும், நினைவு பரிசு வழங்கியும் கவுரவித்தனர்.

அதனைத்தொடர்ந்து பேராசிரியர்கள் முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார்கள். கடந்த கால நினைவுகளை எண்ணி எண்ணி அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் மாணவியும், இன்றைய கண் மருத்துவ சிகிச்சை நிபுணருமான டாக்டர் ஆர்.பிரேமா கூறுகையில், “முன்னாள் மாணவர் சந்திப்பு என்பது மிகவும் உற்சாகமான தருணம். எங்களுடன் படித்த சிலர் இப்போது உயிருடன் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இங்கு வந்தவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவரும் ‘குரூப் போட்டோ’ எடுத்துக்கொண்டனர். முன்னாள் மாணவர்கள் ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர். பின்னர் அனைவரும் பிரியா விடை கொடுத்து அங்கிருந்து சென்றனர்.

Next Story