காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தேயிலை தோட்டங்களில் காவலர்கள் நியமனம் ஆர்.டி.ஓ. வேண்டுகோள்


காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தேயிலை தோட்டங்களில் காவலர்கள் நியமனம் ஆர்.டி.ஓ. வேண்டுகோள்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:45 PM GMT (Updated: 20 Jan 2019 6:59 PM GMT)

காட்டுயானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தேயிலை தோட்டங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என்று கூடலூர் ஆர்.டி.ஓ. வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி, சேரம்பாடி பகுதியில் 2 தோட்ட தொழிலாளர்களை காட்டுயானைகள் தாக்கி கொன்றன. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். காட்டுயானைகள் வருகையை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினரும் திணறி வருகின்றனர். காட்டுயானைகளை கட்டுப்படுத்துவது, தோட்ட தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் தலைமை தாங்கினார். திராவிடமணி எம்.எல்.ஏ., தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் பேசும்போது கூறியதாவது:–

காட்டுயானைகளிடம் சிக்கி தோட்ட தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. அரசு மற்றும் தனியார் தோட்ட நிர்வாகங்களின் அலட்சிய போக்கினால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதிகாலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொழிலாளர்களுக்கு பச்சை தேயிலை பறிக்கும் பணி வழங்கப்படுகிறது.

இதனால் இரவு தொடங்கும் வரை தேயிலை தோட்டங்களில் பாதுகாப்பு இன்றி தொழிலாளர்கள் பணியாற்றும் சூழல் உள்ளதாக புகார்கள் வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் தோட்ட தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கக்கூடாது. கடந்த 2012–ம் ஆண்டு முதல் 2019–ம் ஆண்டு வரை பந்தலூர் பகுதியில் 24 பேர் காட்டுயானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தொழிலாளர்களை பாதுகாக்க தோட்டங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும். மேலும் தங்களது தேயிலை தோட்டங்களில் காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக வனம், காவல், வருவாய் துறைகளுக்கு தோட்ட நிர்வாகங்கள் தகவல் கொடுக்க வேண்டும்.

இதேபோல் இரவில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தால் வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் பரிமாற வேண்டும். இவ்வாறு அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தோட்ட நிறுவன உதவி ஆணையர் சுதா, வனச்சரகர்கள் கணேசன், சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், டேன்டீ கோட்ட மேலாளர் புஷ்பராணி உள்பட அரசு மற்றும் தனியார் தோட்ட நிர்வாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story