‘தமிழன் என்றாலே வீரத்துக்கு பெருமை பெற்றவர்கள்’ ஜல்லிக்கட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


‘தமிழன் என்றாலே வீரத்துக்கு பெருமை பெற்றவர்கள்’ ஜல்லிக்கட்டு விழாவில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 20 Jan 2019 11:15 PM GMT (Updated: 20 Jan 2019 7:07 PM GMT)

‘தமிழன் என்றாலே வீரத்துக்கு பெருமை பெற்றவர்கள்’ என்று விராலிமலை ஜல்லிக்கட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அம்மன் குளத்தில் திருச்சி-மதுரை பைபாஸ் சாலையோரம் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டமே வியக்கின்ற வகையில், முருகபெருமான் எழுந்தருளியுள்ள விராலிமலையில் மிக சிறப்பாக, எழுச்சியாக, மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா நடக்கிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்துள்ளது பாராட்டுக்குரியது.

தமிழன் என்றால் அதற்கு தனிப்பெருமை உண்டு. தை பிறந்தால் வழிப்பிறக்கும் என்று சொல்வார்கள். தை பிறந்த உடனேயே இந்த ஜல்லிக்கட்டு திருவிழாவும் தொடங்கி விடுகிறது. இது வீர விளையாட்டு. நமது முன்னோர்கள் இந்த வீர விளையாட்டை நமக்கு வழங்கி விட்டு சென்றிருக்கிறார்கள். தொன்று தொட்டு இந்த ஜல்லிக்கட்டு நமது வீரர்களுடைய திறமையை வெளிப்படுத்துகிற ஒரு விழாவாக நாம் காலம் காலமாக நடத்தி வருகிறோம்.

தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடக்கும் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டுக்கு இணையாக தற்போது விராலிமலையும் இடம் பெற்றுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு சாதாரண விழா அல்ல. மாபெரும் விழா. காளைகளை அடக்குகிற வீரர்கள் என் முன்னே நின்று கொண்டிருக்கிறார்கள். விவசாய பெருமக்கள் தன் பிள்ளைகளை போல காளைகளை வளர்த்து, அவற்றை ஜல்லிக்கட்டில் ஈடுபட செய்து வீரர்களை அடக்க வைக்கிறார்கள். ஆகவே, தமிழன் என்றாலே வீரத்துக்கு பெருமை பெற்றவர்கள். இந்த ஜல்லிக்கட்டு வாயிலாக நம் பாரம்பரிய வீர விளையாட்டை நாட்டு மக்களுக்கு உணர்த்தி வருகிறோம்.

ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகள் பங்கேற்று மிகப்பெரிய விழாவாக உருவெடுத்துள்ளது. இந்த காளைகளை அடக்க 600 மாடுபிடி வீரர்கள் இங்கே திரண்டு நிற்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி, பாதுகாப்புடன் விதிமுறைகளை பின்பற்றி இங்கு ஜல்லிக்கட்டு நடக்கிறது.

முதல் முறையாக போட்டியில் பங்கு பெறும் வீரர்கள் தவிர, பார்வையாளர்களுக்கும் இன்சூரன்ஸ்(காப்பீடு) செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறேன். ஆகவே, நானும் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன். நானும் ஒரு விவசாயி என்ற காரணத்தால், விவசாயிகளால் வளர்க்கப்படுகிற மாடுகளை வீரர்கள் அடக்குகிறார்கள் என்பதை பார்க்கும்போது உண்மையில் உற்சாகமாக உள்ளது.

இங்கு காளைகளை அடக்குகிற வீரர்களுக்கு தனிப்பரிசாக கார்கள், மோட்டார் சைக்கிள், சைக்கிள் என இப்படி பல்வேறு பரிகள் வழங்கப்படுகிறது. அத்துடன் ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்படுகிறது. ஆக, இந்த தைத் திருநாள் விழாவால், புதுக்கோட்டை மாவட்டத்துக்கு தனிச்சிறப்பும், அந்தஸ்தும் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story