பிரதமர் வேட்பாளர்: தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


பிரதமர் வேட்பாளர்: தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 20 Jan 2019 11:15 PM GMT (Updated: 20 Jan 2019 7:27 PM GMT)

பிரதமர் வேட்பாளர் விஷயத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

கன்னியாகுமரி,

சென்னையில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் கொல்கத்தாவில் நடந்த கூட்டத்தில் தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் தேர்ந்து எடுக்கப்படுவார் என்பதை ஒப்புக்கொண்டு வந்துள்ளார். இதன் மூலம் தி.மு.க. இரட்டை வேடம் போடுவது அப்பட்டமாகி இருக்கிறது. கொல்கத்தாவில் நடத்தியிருப்பது எதிர்கால கூட்டணிக்கான நிகழ்வாக பார்க்க முடியவில்லை. எதிர்காலத்தில் நாட்டை கொள்ளையடிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கும் கூட்டணியாக தான் பார்க்க முடிகிறது.

இந்த கூட்டணியில் 22 கட்சிகள் இணைந்திருப்பதாக கூறுகிறார்கள். 22 கட்சிகள் அல்ல 82 கட்சிகள் இணைந்தாலும் அது அலிபாபாவும் நாற்பது நபர்களும் தான். நாற்பதுக்கு அடுத்து வரும் வார்த்தையை சொல்ல விரும்பவில்லை. இந்த கூட்டணி கருவிலேயே அழியும் கூட்டணியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் வலுவான கூட்டணியை பா.ஜனதா அமைக்கும். அடிப்படை அரசியல் அமைப்பு சட்டம் கூட தெரியாதவர்கள்தான் காலாவதியான பிரதமர் என்று கூறுவார்கள். நரேந்திரமோடியை தவிர வேறு யாராலும் பிரதமர் ஆக முடியாது. அவர் எப்போது தேர்தலில் நின்றாலும் வெற்றி பெற்று பிரதமர் ஆவார். ஜி.எஸ்.டி. வரியில் காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசு பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. இன்னும் 1500 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கிறது. ஆனால் அதனை எதிர்த்து சிலர் கருப்பு கொடி காட்ட உள்ளனர். அவர்களுக்கு தமிழக மக்கள் மீதும், தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீதும் துளியளவு கூட அக்கறை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story