ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு


ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார் என்று வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.

வி.கைகாட்டி,

அரியலூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வி.கைகாட்டி அண்ணா திடலில் நேற்று இரவு நடந்தது. கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், கட்சியின் தலைமை கழக பேச்சாளர் கவிஞர் அறிவழகன், கட்சியின் மாநில எம்.ஜி.ஆர். மன்ற தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.பி. பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சிறப்பாக ஆட்சி நடத்தி மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்த ஸ்டாலினும், டி.டி.வி.தினகரனும் தற்போது கடுமையாக சண்டையிட்டு கொண்டுள்ளனர்.

ஆட்சியை பிடிக்க தி.மு.க. பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொன்ன ஸ்டாலின், தற்போது மம்தா பானர்ஜி நடத்திய கூட்டத்தில் தேர்தலுக்கு பிறகுதான் பிரதமர் யார் என்று சொல்ல முடியும் என்கிறார். எப்படியாவது ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டுமென நினைத்து இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின். கட்சி தலைமை எடுக்கும் முடிவை கொண்டு வருகிற பாராளுமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் கணேசன், பொருளாளர் அன்பழகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவசங்கர், ஆண்டிமடம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், அழகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான மருதமுத்து, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வை.கோ.சி.கவிதா சிவபெருமாள், கீழப்பழுவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பொய்யூர் பாலசுப்ரமணியன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சுரேஷ்குமார், முதல்நிலை ஒப்பந்ததாரர் அயன் ஆத்தூர் நடராஜன், ஜெயங்கொண்டம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கல்யாணசுந்தரம் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அரியலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வராசு வரவேற்றார். முடிவில் முன்னாள் ஒன்றிய பொருளாளர் குமரேசன் நன்றி கூறினார். 

Next Story