பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கியதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள் மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கியதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள் மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Jan 2019 5:15 AM IST (Updated: 21 Jan 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கியதை பொறுக்க முடியாமல் எதிர்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள் என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

மதுரை,

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சியில் இருந்து கார் மூலம் நெல்லை சென்றார். மதுரை வழியாக சென்ற அவருக்கு பாண்டி கோவில் ரிங்ரோடு, விரகனூர், கப்பலூர், கள்ளிக்குடி ஆகிய இடங்களில் மதுரை மாநகர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

பாண்டிக்கோவில் ரிங் ரோடு வரவேற்பு நிகழ்ச்சியின் போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணா கூறினார். தற்போது பொங்கல் பரிசு ரூ.1000 வழங்கப்பட்டதன் மூலம் அண்ணாவின் கூற்றை மெய்ப்பட வைத்துள்ளோம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஏழைகள் மிகவும் உற்சாகமாக மகிழ்ச்சியாக கொண்டாடி உள்ளனர்.

பொங்கல் பரிசு வழங்கியதை பொறுத்து கொள்ள முடியாத எதிர்கட்சியினர் என் மீது இட்டு கட்டி பொய்களை கூறி வருகிறார்கள். பொங்கல் பரிசு வழங்கியதை அவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளிக்குடி சென்றார். அங்கு அவருக்கு கள்ளிக்குடியை தனி வருவாய் வட்டமாக அறிவித்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அப்போது சுமார் 70 அடி உயரம் உள்ள கொடிக் கம்பத்தில் முதல்–அமைச்சர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அந்த கட்சியின் ஆட்சி மூலம் ஒரு குடும்பம் மட்டுமே பலன் அடையும். ஆனால் அ.தி.மு.க மக்கள் கட்சி. ஒரு சாதாரண கட்சி தொண்டர்கள் கூட எம்.எல்.ஏ., எம்.பி. ஆகலாம். ஆனால் தி.மு.க.வில் வாரிசுகள் மட்டும் தான் பதவிகளுக்கு வர முடியும்.

அ.தி.மு.க. அரசு பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டில் கல்வி உயர்ந்தால் மற்ற அனைத்து துறைகளும் உயரும். வைகை நதியை சீரமைக்க ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் ஆற்றினை சுத்தப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப் பட உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story