காரைக்குடியில் பெண்ணை ஆபாச படம் எடுத்து வலைதளத்தில் பரப்பிய வாலிபர் முகநூல் நட்பால் விபரீதம்
பெண்ணை ஆபாசபடம் எடுத்து வலைதளத்தில் பரப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி,
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒரு பெண்ணுக்கு 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன 2–வது நாளே கணவர் விபத்தில் இறந்து விட்டார். அதன்பின்பு சில வருடங்கள் கழித்து மறுமணம் செய்துவைத்துள்ளனர்.
நாளடைவில் கருத்து வேறுபாடு காரணமாக 2–வது கணவரை அவர் விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் அவருடன் காரைக்குடி அண்ணாநகர் தேவர் தெருவைச் சேர்ந்த ஆசிக் ரஹ்மான் (24) என்பவர் முகநூல் மூலம் அறிமுகமானார். அதன்மூலம் இவர்களின் நட்பு வளர்ந்தது. இந்த நிலையில்தான் ஒரு விதவையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஆசிக் ரஹ்மான் கூறியுள்ளார். இதை நம்பி அவருடன் அந்த பெண் நெருங்கி பழகி வந்தாராம்.
இதையடுத்து இவர்கள் அடிக்கடி பல்வேறு இடங்களில் சந்தித்து கொண்டதை தொடர்ந்து, சம்பவத்தன்று காரைக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்தாராம்.
மேலும் அதனை வீடியோ எடுத்து வலைதளங்களில் பரப்பி விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்து கேட்ட போது, அவர் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, ஆசிக்ரஹ்மானை தேடி வருகின்றனர்.