தூத்துக்குடியில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு


தூத்துக்குடியில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 4:15 AM IST (Updated: 21 Jan 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 3 மோட்டார் சைக்கிள்களை தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகர் செயிண்ட் மேரிஸ் காலனியை சேர்ந்தவர் அந்தோணிராஜ். இவர் தனியார் நிறுவன காவலாளியாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்தது.

இதே போன்று தூத்துக்குடி தஸ்நேவிஸ்நகரை சேர்ந்த தனியார் நிறுவன சூப்பிரவைசர் சந்தகராஜ் (45) மற்றும் தங்கதுரை (56) ஆகிய இருவரும் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி இருந்தனர். இவர்களின் மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் தீவைத்து எரித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் வீடியோ பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். மேலும் மர்ம ஆசாமிகள் 2 பேர் முகமூடி அணிந்து வந்து மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை தேடி வருகின்றனர். ஏற்கனவே டி.எம்.பி.காலனியில் அதிகாலை நேரத்தில் 11 வாகனங்களை மர்ம ஆசாமிகள் சேதப்படுத்தி சென்றனர். இந்த நிலையில் தாளமுத்துநகர் பகுதியில் 3 மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story