கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் நடைபயணம்


கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் நடைபயணம்
x
தினத்தந்தி 20 Jan 2019 10:45 PM GMT (Updated: 20 Jan 2019 8:27 PM GMT)

கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலையை சீரமைக்க கோரி நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மத்தூர் வழியாக நடைபயணம் மேற்கொண்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் வழியாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை திண்டிவனம் சாலையை சீரமைக்க கோரி நடைபயணம் மேற்கொண்டனர். இந்த நடை பயணம் கிருஷ்ணகிரி மாவட்ட மண்டல பொறுப்பாளர் கரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது அவர் கூறியதாவது:-

கிருஷ்ணகிரியில் இருந்து மத்தூர், ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் மற்றும் செஞ்சி வழியாக திண்டிவனம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 77 சுமார் 220 கிலோமீட்டர் தூரம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் பல நூறு உயிர்களை பலி வாங்கியுள்ளது. மேலும் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலருக்கு கை, கால்கள் இழப்பு ஏற்பட்டு பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அனைத்து பொதுமக்களின் சார்பில் கிருஷ்ணகிரியில் இருந்து திண்டிவனம் வரையில் 220 கிலோமீட்டர் தூரம் நெடுஞ்சாலை துறைக்கும், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபயணம் மேற்கொள்கிறோம். இந்த சாலையை விரைந்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கி பயணிகளுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நெடுஞ்சாலை துறையை வலியுறுத்துகிறோம். இந்த சாலை சீரமைக்கப்படாவிட்டால் விரைவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணமாக சென்றனர்.

Next Story