கவர்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் மதுக்கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பேன் கிரண்பெடி உறுதி


கவர்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் மதுக்கடைகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுப்பேன் கிரண்பெடி உறுதி
x
தினத்தந்தி 20 Jan 2019 10:45 PM GMT (Updated: 20 Jan 2019 8:36 PM GMT)

மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்றால் கிராமத்தில் உள்ள அனைவரும் கையெழுத்திட்டு கவர்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று கிரண்பெடி கூறினார்.

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூர் அடுத்த குருவிநத்தம் ஆர். ஆர். நகரில் கழிவுநீர் வாய்க்கால் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக கவர்னர் அலுவலகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து நேற்று காலையில் கவர்னர் கிரண்பெடி அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் ரவி பிரசாத், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பாலசுந்தரம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

உடனடியாக அந்த பகுதிக்கு வடிகால் வசதி அமைத்துத் தர திட்டம் கொண்டு வரவும், மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீரை பாசன வாய்க்காலில் விடுவதை நிறுத்தி மாற்று ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அப்பகுதியில் தனிநபர் கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். தொடர்ந்து குருவிநத்தம் அம்மன் கோவிலில் மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் சுய தொழில் தொடங்குவதற்கும் கடன் வழங்குவதற்கு குறித்து அதிகாரிகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கினார்.

இக்கூட்டத்தில் பேசிய மகளிர் சுயஉதவிக் குழுவினர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த பெண்கள் தயாராக இருப்பதாகவும் அதற்கான ஊக்கத் தொகை வழங்கினால் நாங்கள் செயல்படுத்துவோம் என்று பேசினார். மேலும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பால் கொள்முதல் செய்து பாண்லே நிறுவனம் மற்றும் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து தரவும் கோரினர்.

மேலும் அவர்கள் பேசுகையில் முள்ளோடை பகுதியிலும் சோரியாங்குப்பம் பகுதியில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். அந்தக் கடைகளை மாற்று இடத்தில் ஏற்பாடு செய்துவிட்டு, பயமின்றி பெண்கள் அவ்வழியே பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கூறினர். இதற்கு பதில் அளித்து கவர்னர் கிரண்பெடி பேசுகையில் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்றால் கிராமத்தில் உள்ள அனைவரும் எனக்கு கையெழுத்திட்டு கவர்னர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறினார்.

முன்னதாக கவர்னர் வந்திருப்பதை அறிந்த குருவிநத்தம் – பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் கவர்னரிடம், இலவச அரிசி துணிகள் வழங்கப்பட்டது. தற்போது அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளனர். மேலும் உடனடியாக இலவச அரிசித் திட்டத்தை தொடங்க வேண்டும், இலவச அரிசிக்கு பதிலாக வழங்கப்படும் தொகை மிகவும் குறைந்த அளவாக உள்ளதால், அந்தப் பணத்தைக் கொண்டு அரிசி வாங்க முடியாது. எனவே ரே‌ஷன் கார்டுகள் மூலம் இலவச அரிசி வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் கவர்னர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் கவர்னரிடம் பேச அனுமதிக்காமல், உங்கள் புகாரை கவர்னர் அலுவலகத்திற்கு சென்று தெரிவிக்குமாறு தடுத்தனர்.

மேலும் அப்பகுதி மக்கள் அடுக்கடுக்காக புகார்கள் தெரிவித்து வந்ததால் எதையும் பொருட்படுத்தாமல் அந்தக் கூட்டத்தை விரைவாக முடித்துக் கொண்டு கவர்னர் அலுவலகம் திரும்பினார்.


Next Story