மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து பைகள் தயாரிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, நல்லசாமி கோரிக்கை


மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து பைகள் தயாரிக்க வேண்டும் தமிழக அரசுக்கு, நல்லசாமி கோரிக்கை
x
தினத்தந்தி 21 Jan 2019 4:15 AM IST (Updated: 21 Jan 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து பைகள் தயாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

தமிழ்நாடு கள் இயக்கத்தின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சேலத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கி பேசினார். இந்த கூட்டத்தில் கீழ் பவானி விவசாயிகள் நலச்சங்க செயலாளர் தங்கராஜ், சேலம் மாவட்ட அமைப்பாளர் தேவப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்து உள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். தமிழ்நாட்டில் நெல், வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக மரவள்ளிக்கிழங்கு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

மானியம்

தற்போது மரவள்ளிக் கிழங்கு விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து பைகள் தயாரிக்க வேண்டும். அதே போன்று அதில் இருந்து தயாரிக்கப்படும் பைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழத்தில் ஏராளமான சேகோ ஆலைகள் இருந்தன. தற்போது 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டு உள்ளன. மூடப்பட்ட ஆலைகளுக்கு மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து பைகள் தயாரிப்பதற்கான உரிமம் வழங்க வேண்டும். மேலும் இந்த ஆலைகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தினால் மரவள்ளிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்கும். அப்போது விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு அதிகம் பயிரிடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story