திண்டுக்கல் அருகே அரசு பஸ்-வேன்கள் மோதல்; 2 பெண்கள் பலி 30 பேர் படுகாயம்
திண்டுக்கல் அருகே அரசு பஸ்-வேன்கள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை, வடமதுரையை சேர்ந்த கன்னிச்சாமி (வயது 42) என்பவர் ஓட்டினார். 30-க்கும் மேற்பட்டோர் பஸ்சில் பயணம் செய்தனர். திண்டுக்கல் அருகே பழனி சாலையில் பாலம்ராஜக்காப்பட்டி காமாட்சிபுரம் பிரிவில் சென்று கொண்டிருந்தது.
இதேபோல் பழனியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலக்குடி நோக்கி ஒரு வேன் சென்றது. அந்த வேன், திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி அங்கிருந்த பனைமரத்தின் மீது மோதி நின்றது.
இதற்கிடையே பஸ் மீது மோதிய வேன் சாலையின் குறுக்காக திரும்பி நின்றது. அப்போது அந்த வழியாக பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த மற்றொரு வேன், அதன் மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் திருப்பாலக்குடி நோக்கி சென்ற வேனில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த பத்மா (22), திண்டுக்கல் நோக்கி வந்த வேனில் பயணம் செய்த திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த தங்கம்மாபீபி (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
மேலும் அரசு பஸ் டிரைவர் மற்றும் வேன்களில் பயணம் செய்த 30 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான வேன் சாலையின் குறுக்காக நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரம் மூலம் வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
பின்னர் படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story