மலைப்பாதையில் ஆபத்து பயணங்கள்


மலைப்பாதையில் ஆபத்து பயணங்கள்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:00 AM IST (Updated: 21 Jan 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதி அமைந்துள்ளது.

சின்னமனூர்,

இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதிகளில் 5 அணைகள் அமைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் தேயிலை தோட்டங்கள் உள்ளன. பகல் நேரங்களிலும் மேகங்கள் தரையிறங்கி தேயிலைத் தோட்டங்களையும், குடியிருப்புகளையும் வருடிச் செல்லும் காட்சிகளை பார்க்கலாம். இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்து விடுகின்றனர். இந்த மலைப்பாதையில் போதிய அளவில் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. இதனால், சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்கள், கார், வேன்களில் வந்து செல்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதோடு, மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கும் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.

வாகனங்கள் அதிக அளவில் சென்று வரும் நிலையில், விதிமீறல் பயணங்கள் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணம் செய்வது அதிக அளவில் நடக்கிறது. சாதாரண சாலைகளில் வாகனம் ஓட்டுவதற்கும், மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. முன் அனுபவம் இல்லாமல் மலைப்பாதையில் வாகனம் ஓட்டுபவர்களே விபத்துகளில் அதிக அளவில் சிக்குகின்றனர்.

இந்த மலைப்பாதை சீரமைப்பு பணியின் போது ஏராளமான விதிமீறல்கள் நடந்துள்ளன. முதலில் இந்த மலைப்பாதை அமைக்கும் பணிக்கு பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்து இருந்தது. பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் மலைப்பாதை சீரமைப்பு பணிக்கு அனுமதி வழங்கப்பட்டது. முக்கியமாக வனவிலங்குகள் இடம் பெயரும் வழித்தடங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறப்பட்டு இருந்த போதிலும், வன விலங்குகள் மலைப்பாதையை கடந்து செல்ல முடியாத அளவுக்கு சரிவான பாதை இன்றி செங்குத்தாக மலைப்பகுதி வெட்டியெடுத்து பாதை அமைக்கப்பட்டது. இதனால், சாரல் மழை பெய்தால் கூட மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்படுகிறது. இதுபோன்ற காலங்களில் வாகனங்கள் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமானவர்கள் இருசக்கர வாகனங்களில் விதியை மீறி 3 பேருடன் செல்கின்றனர். இதுபோன்ற ஆபத்து பயணங்களால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஆபத்து பயணங்களை தவிர்க்க இந்த மலைப்பாதையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்பதும், மலைப்பாதையில் வாகனங்கள் கீழிறங்கும் பகுதியில் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து கண்காணிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கை யாக உள்ளது.


Next Story