போடியில் சொத்து தகராறில் பயங்கரம்: தாத்தா, பேரன் குத்திக்கொலை அண்ணன்-தம்பி வெறிச்செயல்


போடியில் சொத்து தகராறில் பயங்கரம்: தாத்தா, பேரன் குத்திக்கொலை அண்ணன்-தம்பி வெறிச்செயல்
x
தினத்தந்தி 21 Jan 2019 4:30 AM IST (Updated: 21 Jan 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

போடியில் சொத்து தகராறில் தாத்தா, பேரன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

போடி,

தேனி மாவட்டம் போடி டி.வி.கே.கே.நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 60). இவர், தேனியில் உள்ள பூக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு கமலகண்ணன் (23) என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். கமலகண்ணன் கட்டிட தொழிலாளியாக உள்ளார்.

ஈஸ்வரனின் அண்ணன் காமராஜின் மகன் கார்த்தி (21). இவரும் கட்டிட தொழிலாளி ஆவார். இவர்கள் அனைவரும் அருகருகே வசித்து வந்தனர். இந்தநிலையில் ஈஸ்வரனுக்கும், கமலகண்ணனுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் குடி போதையில் வீட்டுக்கு வந்த கமலகண்ணன் தனது தந்தையிடம் சொத்து குறித்து பேசினார்.

ஈஸ்வரன் பெயரில் உள்ள சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டு கமலகண்ணன் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது சொத்துகளை மகள் பவுன்தாய் மகன் பாண்டி பெயருக்கு எழுதி வைப்பதாக ஈஸ்வரன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கமலகண்ணன் தன்னிடம் இருந்த கத்தியால் ஈஸ்வரனை சரமாரியாக குத்தினார்.

அப்போது அருகில் குடிபோதையில் இருந்த கார்த்தி மற்றும் பவுன்தாய் மகன் பாண்டி (21) ஆகியோர் கமலகண்ணனை தடுத்து சொத்து குறித்து பேசிக் கொள்ளலாம் என்று அவரை சமாதானப்படுத்த முயன்றனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த ஈஸ்வரன், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

இதனையடுத்து தாத்தாவின் சொத்துகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என்று கூறிய பாண்டி, அனைவரையும் வீட்டை விட்டு வெளியே போகுமாறு கூறினார். இது, அங்கிருந்த கார்த்திக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கமலகண்ணனிடம் இருந்த கத்தியை பறித்து பாண்டியை கார்த்தி சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பாண்டி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போடியில் நள்ளிரவில் நடந்த இந்த இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலக்கண்ணன், கார்த்தி ஆகியோரை தேடினர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் போடி கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் முன்னிலையில் சரண் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட பாண்டி, தேனியில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. போடியில் நள்ளிரவு நடந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story