செங்கல்பட்டு திருத்தேரியில் சாலை, குடிநீர் வசதி கேட்டு தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு


செங்கல்பட்டு திருத்தேரியில் சாலை, குடிநீர் வசதி கேட்டு தி.மு.க. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 22 Jan 2019 4:00 AM IST (Updated: 21 Jan 2019 9:24 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு திருத்தேரியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சாலை மற்றும் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்ட திருத்தேரி கிராமத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார். கலைவாணி, கே.ஆர்.சி., ஜெ.சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் சண்முகம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

அப்போது பொதுமக்களின் சார்பில் 11-வது வார்டு பகத்சிங் நகரில் சாலை வசதி கேட்டும், பகத்சிங் நகர், சத்யா நகர் ஆகிய இரண்டுக்கும் சேர்த்து புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும், ஜெ.ஜெ.நகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வீடுகளில் முறையாக மின் இணைப்பு வழங்க வேண்டும், மேலும் அந்த பகுதிகளில் சாலை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மனு அளித்தனர். பாரேரி 12-வது வார்டில் உள்ள பள்ளமான பகுதிகளில் கழிவு நீர் புகுவதால், கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க மனு அளித்தனர்.

இதனை பெற்றுக்கொண்ட வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்த இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

Next Story