40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை போராடி மீட்பு


40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை போராடி மீட்பு
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 7:59 PM GMT)

தென்காசி அருகே 40 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை சுமார் 2½ மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, மிளா உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன.

இந்தநிலையில் புளியங்குடி பீட் பகுதியான மலையடிவாரத்தில் புளியங்குடியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவு யானைக்கூட்டம் புகுந்தது. அங்குள்ள எலுமிச்சை மரங்களை சாய்த்தும், தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தும் சேதப்படுத்தின. அப்போது அந்த கூட்டத்துடன் வந்த 4 வயது குட்டி யானை ஒன்று, அந்த தோட்டத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்தது. 40 அடி ஆழமுள்ள வட்ட வடிவ கிணற்றில் சுமார் 15 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இரவு முழுவதும் குட்டி யானை தண்ணீரில் நீந்தி தத்தளித்தது.

நேற்று காலை குருசாமி தனது தோட்டத்துக்கு சென்றார். அங்கு எலுமிச்சை மற்றும் தென்னை மரங்கள் சாய்ந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தோட்டத்தை சுற்றிப் பார்த்தபோது, கிணற்றில் குட்டி யானை தத்தளிப்பதை கண்டார். இதுகுறித்து உடனடியாக அவர் புளியங்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன், கிணற்றின் ஒரு பகுதி சுவரை இடித்து, அதன் அருகே சரிவாக பாதை ஏற்படுத்தினர்.

இதையடுத்து கயிறு கட்டி பாதுகாப்பாக காயம் எதுவும் இல்லாமல் அந்த பாதை வழியாக குட்டி யானையை பத்திரமாக மீட்டனர். காலை 9 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரை நடந்த 2½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் குட்டி யானை மீட்கப்பட்டது. இப்பணியின்போது சற்று தொலைவில் தாய் யானையும் நின்று கொண்டிருந்தது. கிணற்றில் இருந்து வெளியே வந்த குட்டி யானை சந்தோஷமாக ஓடி தாய் யானையுடன் காட்டுக்குள் சென்றது.

Next Story