மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்: அரசு பள்ளி ஆசிரியர்- என்ஜினீயரிங் மாணவர் பலி டிரைவர் தப்பியோட்டம்


மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்: அரசு பள்ளி ஆசிரியர்- என்ஜினீயரிங் மாணவர் பலி டிரைவர் தப்பியோட்டம்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:00 PM GMT (Updated: 21 Jan 2019 8:15 PM GMT)

கரூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதிய விபத்தில் அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தனர். கார் டிரைவர் தப்பியோடினார்.

கரூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் கும்பகோணத்தார் ரைஸ் மில் தெருவை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 31). இவர் பரமத்தி வேலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். பரமத்தி வேலூர் மீனவர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் சந்தோஷ் (19). இவர் நாமக்கலில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் பிரிவில் படித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் சொந்தவேலை காரணமாக முரளிதரனும், சந்தோசும் கரூருக்கு வந்தனர். பின்னர் வேலையை முடித்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை முரளிதரன் ஓட்டினார். பின்னால் சந்தோஷ் அமர்ந்திருந்தார்.

மோட்டார் சைக்கிள் கரூர் அருகே சேலம் சாலையில் வெங்கமேடு ராம்நகர் பைபாஸ் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த ஒரு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, முரளிதரன், சந்தோஷ் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதியது.

பின்னர் இவர்களுக்கு முன்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த ராஜகுரு (20) என்பவர் மீதும் கார் மோதி நின்றது. இதையடுத்து கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முரளிதரன், சந்தோஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராஜகுரு லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக வெங்கமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் முரளிதரன், சந்தோஷ் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற கார் டிரைவர் கரூர் வையாபுரி நகரை சேர்ந்த பிரவின் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story