குட்கா ஊழல் விவகாரம்: சசிகலா அறையில் கைப்பற்றிய ஆவணம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் டி.ஜி.பி.க்கு பணி நீட்டிப்பு வழங்கியதற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு
குட்கா ஊழல் தொடர்பாக சசிகலா அறையில் கைப்பற்றிய கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை மதுரை ஐகோர்ட்டில் வருமானவரித்துறையினர் நேற்று தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் சிக்கிய டி.ஜி.பி.க்கு பணி நீட்டிப்பு வழங்கியதற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
மதுரை,
மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–
கடந்த 2016–ம் ஆண்டு நடந்த குட்கா ஊழலில் அப்போதைய சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாருக்கு, வருமான வரித்துறையினர் பரிந்துரை கடிதம் அளித்தனர். பின்னர் டி.கே.ராஜேந்திரன் தமிழக டி.ஜி.பி. ஆக பணி உயர்வு பெற்றார். அவரை டி.ஜி.பி. பதவியில் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்து கடந்த 30.6.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.
இதற்கிடையே குட்கா ஊழலை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் நான் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, டி.கே.ராஜேந்திரனுக்கு குட்கா ஊழலில் உள்ள தொடர்பு பற்றி வருமானவரித்துறையினர் அளித்த அறிக்கை மாயமாகிவிட்டது என்று தமிழக தலைமை செயலாளர் மதுரை ஐகோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலாவின் அறையில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதில் குட்கா ஊழலில் டி.கே.ராஜேந்திரனுக்கு தொடர்பு இருந்தது குறித்து வருமான வரித்துறையினர் அனுப்பிய கடிதங்களும் சிக்கி உள்ளன. எனவே டி.கே.ராஜேந்திரனை டி.ஜி.பி. பதவியில் நீட்டிக்க செய்வதற்கான நடவடிக்கைகளில் முறைகேடு நடந்து உள்ளது. எனவே டி.கே.ராஜேந்திரனை தமிழக டி.ஜி.பி. ஆக பணி நீட்டிப்பு செய்து பிறப்பிக்கப்பட்ட அரசாணை செல்லாது என்று உத்தரவிட வேண்டும். இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளை விசாரிக்க சி.பி.ஐ. சிறப்பு குழு ஏற்படுத்திட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இதேபோல மனுதாரர் தாக்கல் செய்த துணை மனுவில், “குட்கா ஊழல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘குட்கா முறைகேட்டில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை‘ என்று கூறியிருந்தார். பின்னர் இந்த ஆவணங்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. ஆனால் தலைமை செயலாளர், குட்கா முறைகேடு தொடர்பான கடிதம் இல்லை என்று தவறான தகவலை கோர்ட்டில் தெரிவித்துள்ளார். இதற்காக தலைமை செயலாளர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சசிகலா அறையில் கைப்பற்றிய குட்கா விவகாரம் தொடர்பான கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து வருமானவரித்துறையினர் சார்பில் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, டி.ஜி.பி.க்கு பணி நீட்டிப்பு செய்தததை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.