குறைதீர்வு நாள் கூட்டத்தில் இலவச வீடு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு


குறைதீர்வு நாள் கூட்டத்தில் இலவச வீடு கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 22 Jan 2019 4:40 AM IST (Updated: 22 Jan 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

குறைதீர்வு நாள் கூட்டத்தில் இலவச வீடு வழங்கக்கோரி பொதுமக்கள் கலெக்டர் ராமனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார் மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா, ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, கடனுதவி கேட்டும் மற்றும் பொதுநல மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து 492 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடத்தில் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேல்மொணவூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 9 வருடங்களாக அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வசித்து வருகிறோம். எங்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

மேல்விஷாரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், மேல்விஷாரம், புதுப்பேட்டை 3-வது தெருவை சேர்ந்த நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு பட்டா வழங்கக்கோரி குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எனவே இந்த மனு மீது நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

காட்பாடியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் உள்ள மாட்டு வண்டி தொழிலாளர்கள் பசியும், பட்டினியுமாக வாழ்ந்து வருகிறோம். மாடுகளுக்கு தீவனம் வாங்க முடியாத நிலையில் உள்ளோம். ஆகையால் எங்களுக்கு காட்பாடி பகுதியில் மணல் குவாரி அமைக்கவும், கட்டுமான பணிக்கு தடையில்லாமல் மணல் கிடைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

வாலாஜா தாலுகா, வாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அளித்துள்ள மனுவில், எங்கள் பகுதியில் சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. சாராயம் விற்பனைக்கு எதிராக மனு கொடுத்த பொதுக்களுக்கு, சாராயம் விற்பவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கவுராபேட்டை கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், வேலூர், குடியாத்தம், ஆம்பூர், பேரணாம்பட்டு தாலுகாக்களில் உயர்மின் கோபுரங்கள் அமைத்துள்ள நிலங்களில் முறைப்படி சர்வே செய்து விவசாயிகளுக்கு மார்க்கெட் மதிப்புடன் இழப்பீடு வழங்க வேண்டும்.

சாகுபடி முறையில் அளவீடு செய்து இழப்பீடு தொகையை தனித்தனியாக வழங்க வேண்டும். மேலும் கோழிப்பண்ணைகளின் பகுதியில் உயர்மின் கோபுரங்கள் அமைத்தாலும் இழப்பீடு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.


Next Story