மரத்தில் ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - கையகப்படுத்திய நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரிக்கை


மரத்தில் ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி - கையகப்படுத்திய நிலத்தை திரும்ப ஒப்படைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jan 2019 5:00 AM IST (Updated: 22 Jan 2019 5:00 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்த இடத்தில், கையகப்படுத்திய நிலத்தை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி மரத்தில் ஏறி விஷம் குடித்து தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

வேலூர்,

கையகப்படுத்திய நிலத்தை திரும்ப ஒப்படைக்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்த இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் தொழிலாளி ஒருவர் மரத்தில் ஏறி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை பெற்று கொண்டிருந்தனர். கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை என்பதால் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுக்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கலெக்டர் மனு வாங்கிய அறைக்கு வெளியே பொதுமக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது பிற்பகல் 1.45 மணி அளவில் கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் திடீரென்று அங்குள்ள மரத்தில் வேகமாக ஏறினார். அப்போது அவர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக கூறினார்.

இதனால் அங்கு நின்றிருந்த பொதுமக்களும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுபற்றி அரசு அதிகாரிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, மைதிலி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்குமாறு கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அவர் கையகப்படுத்திய தனது நிலத்தை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினார். மேலும் திடீர் என்று தனது பாக்கெட்டில் வைத்திருந்த விஷப்பாட்டிலை எடுத்து விஷத்தை குடித்துவிட்டார். உடனடியாக அவரை மரத்தில் இருந்து மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். அதற்குள் விஷம் குடித்த நபரின் வாயில் இருந்து நுரைதள்ளத்தொடங்கியது. இதனால் பதற்றம் அடைந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மரத்தில் ஏறி விஷம் குடித்த நபரை கயிறுகட்டி கீழே இறக்கினர். பின்னர் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் மரத்தில் ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றவர் ஆம்பூர் தாலுகா கீழ்முருங்கை பகுதியை சேர்ந்த இப்ராகிம் என்பவருடைய மகன் நூருல்லா (வயது 35) என்பதும் விவசாய கூலிதொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. இருவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். மேலும் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் இவர்களுடைய வீடு எரிந்துவிட்டதாகவும், அப்போது வீட்டில் வைத்திருந்த இவர்களுடைய நிலத்தின் பத்திரமும் எரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

உரிய ஆவணம் இல்லாததால் இவர்களுடைய இடத்தை அரசு கையகப்படுத்தி விட்டதாகவும், அந்த இடத்தை தங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி நூருல்லாவின் தாய் அமீன்பீ பலமுறை புகார்மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் மரத்தின்மீது ஏறி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story