ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்


ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும்
x
தினத்தந்தி 21 Jan 2019 11:47 PM GMT (Updated: 21 Jan 2019 11:47 PM GMT)

ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர், சிவகிரி, ராயகிரி, ராமநாதபுரம், விசுவநாதபேரி, சுப்பிரமணியபுரம், அருளாச்சி, இனாம் கோவில்பட்டி, ஆத்துவழி, சிந்தாமணிப்புதூர், தெற்கு சத்திரம், மருதநாச்சியார்புரம் உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் 20-க்கும் மேற்பட்ட வேன்களில் தங்களுடைய ஊர்களில் இருந்து நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்தனர். அந்த மக்கள் கலெக்டர் அலுவலகத்தின் முன்பு திரண்டு நின்று ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

இவர்களுடன் மகாத்மா காந்தி சேவா சங்க தலைவர் தவமணி, தரணி சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குலாம் முகமது, பாரதீய ஜனதா கட்சி வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் ஜெயகோதண்டராமன், வாசுதேவநல்லூர் புதுமந்தை ஆனந்தராஜ், ராமநாதபுரம் கனகசெல்வம், நெல்கட்டும்செவல் பொன்னுச்சாமி ஆகியோர் தலைமையில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கலெக்டரிடம் ராஜபாளையம்-செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.

மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கலெக்டர் அலுவலகம் முன்பு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ராஜபாளையம் முதல் செங்கோட்டை பிரிவு வரை தேசிய நெடுஞ்சாலையின் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அரசும், மாநில அரசும் உத்தரவிட்டு உள்ளது. இதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சாலை வாசுதேவநல்லூர் வழியே வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அரசு அறிவித்த வழித்தடத்தில் அதாவது வாசுதேவநல்லூர் வழியாக 4 வழிச்சாலை திட்டப்பணியை உடனே தொடங்கி விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறி உள்ளனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ஷில்பா, அந்த மனுவை அரசுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 

Next Story