பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நாடு முழுவதும் இருந்து திரண்ட பக்தர்கள் ஒரே நாளில் 1 கோடி பேர் புனித நீராடினர்


பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நாடு முழுவதும் இருந்து திரண்ட பக்தர்கள் ஒரே நாளில் 1 கோடி பேர் புனித நீராடினர்
x
தினத்தந்தி 22 Jan 2019 5:36 AM IST (Updated: 22 Jan 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

பிரயாக்ராஜ் நகரில் நடந்து வரும் கும்ப மேளாவில் நேற்று ஒரே நாளில் 1 கோடியே 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.

பிரயாக்ராஜ்,

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகர் என்ற பெயரால் தற்போது அழைக்கப்படுகிற அலகாபாத்தில், கடந்த 15-ந் தேதி கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது.

கும்பமேளாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி நேற்றைய தினம் பவுஷ் பூர்ணிமா தினமாக கடைப்பிடிக்கப்பட்டது. மேலும் இது கும்பமேளா விழாவின் 2-வது புண்ணிய தினமாக கருதப்பட்டது.

எனவே இந்த நாளில் புனித நீராட பக்தர்கள் ஆர்வம் காட்டினர். நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கங்கை நதிக்கரையில் குவியத்தொடங்கினர். புனித நீராடி கடவுளை வழிப்பட்டனர். நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 1 கோடியே 7 லட்சம் பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவந்த் சிங்கும் பக்தர் களுடன் நீராடினார்.
தொடர்ந்து பக்தர்கள் கும்பமேளாவிற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த கும்பமேளாவின்போது மொத்தம் 12 கோடி மக்கள் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

கும்பமேளா, ஆன்மிக, மத ரீதியிலான விழா என்றபோதும், உத்தரபிரதேச மாநிலத்தில் நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு இது மிகப்பெரிய பங்களிப்பை செய்யப்போகிறது.

பல்வேறு துறைகளில் சுமார் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கப்போகிறது என்று இந்திய தொழிற்சம்மேளனம் (சி.ஐ.ஐ.) ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மருத்துவ சுற்றுலா, சுற்றுலா சார்பு துறைகளில் சுமார் 85 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும். அமைப்பு சாராத (வழிகாட்டிகள், வாடகைக் கார் டிரைவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளிட்டவை) துறையில் 55 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.

வரும் நாட்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மொரீசியஸ், ஜிம்பாப்வே, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து பெருந்திரளான எண்ணிக்கையில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவர் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த கும்பமேளா, உத்தரபிரதேச மாநில அரசுக்கு சுமார் ரூ.1¼ லட்சம் கோடி வருவாயை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

49 நாட்கள் நடைபெறும் கும்பமேளா விழா மார்ச் மாதம் 4-ந் தேதி நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story