தாய்–மகள் மீதான தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 19 பேர் கைது


தாய்–மகள் மீதான தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 19 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2019 11:15 PM GMT (Updated: 22 Jan 2019 9:25 PM GMT)

தாய்– மகள் மீதான தாக்குதலை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 19 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

பெருந்துறை அருகே பெத்தாம்பாளையம் பொன்னாண்டவலசு அண்ணாநகர் காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அமராவதி (வயது 35). இவர்களுக்கு குணசேகரன் (21) என்ற மகனும், பவித்ரா (18) என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு பழனிசாமி வேலைக்கு சென்றுவிட்டார். அமராவதி தனது மகன், மகளை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள அவருடைய தம்பி திருமுருகனின் வீட்டிற்கு சென்றார். அங்கு திருமுருகனின் மனைவி ஞானம்மாள், மகன் அரவிந்த், மகள் சத்தியஸ்ரீ ஆகியோர் இருந்தனர்.

அப்போது ஒரு கும்பல் திடீரென வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அமராவதி, பவித்ரா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவர்களை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்து முன்னணியினர் சிலர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை திரண்டனர். மத மாற்றம் செய்ய முயற்சித்து அமராவதியையும், பவித்ராவையும் சிலர் தாக்கியதாக அவர்கள் குற்றம் சாட்டினார்கள். அவர்களிடம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாமல், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் ஜெகதீஸ் தலைமையில் சிலர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். இதில் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வீடு புகுந்து தாய், மகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story