ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் –ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் பணிகள் பாதிப்பு


ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர் –ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் பணிகள் பாதிப்பு
x
தினத்தந்தி 23 Jan 2019 4:30 AM IST (Updated: 23 Jan 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியர்–ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஈரோடு,

தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியம் என்கிற புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக வைக்கப்பட்டு வருகிறது. இதை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ சார்பில் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்கலம், நம்பியூர், தாளவாடி ஆகிய 10 தாலுகா தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு தாலுகா அலுவலகத்தின் முன்பு நடத்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ–ஜியோ அமைப்பு தாலுகா குழு அமைப்பாளர் சுகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜெ.பாஸ்கர்பாபு, ப.சரவணன், வி.எஸ்.முத்துராமசாமி, ரா.மணி, யோகன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

போராட்டத்தில் ஆசிரிய–ஆசிரியைகள் மற்றும் அரசு ஊழியர்கள், உள்ளாட்சித்துறை பணியாளர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

இதுபற்றி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளருமான பாஸ்கர் பாபு கூறியதாவது:–

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கிறோம். பல முறை அரசுக்கு எங்கள் கோரிக்கையை பல்வேறு போராட்ட வடிவிலும், மனுக்கள் வடிவிலும் எடுத்துக்கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இந்த போராட்டத்துக்கு காரணம். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் பணி ஓய்வுக்கு பின்னர் ஓய்வூதியம் கேட்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள். மறுக்கப்பட்ட ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை கேட்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் அவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து பணிவரன்முறை செய்ய வேண்டும் என்று முறையான கோரிக்கையை வைத்து போராடுகிறார்கள். வருங்காலத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்க இருக்கும் பகுப்பாய்வு குழுவினை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் 5 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் மூடப்படும் நிலையை கைவிட வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிக்கூடங்களை உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்களுடன் இணைக்கும் முடிவினை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலியுறுத்துகிறோம்.

இந்த போராட்டத்தை அரசு பணியில் இருக்கும் அனைவரும் ஆதரித்து இருக்கிறார்கள். காரணம், அரசு பணியில் இருப்பவர்களுக்கு பணிக்கு பின்பு ஒரே ஆதரவு ஓய்வூதியம்தான். அதுவும் இல்லை என்றால் என்ன செய்வது?. எனவேதான் தற்போது காலவரையற்ற ஒரு போராட்டத்தை, வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கிறோம். ஈரோடு மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். ஆசிரிய–ஆசிரியைகள் முழுமையாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

சட்டம் –ஒழுங்கை பாதுகாக்கும் பணியில் இருக்கும் தாசில்தார்கள், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரை இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் மாவட்டத்தில் அரசு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அதே நேரம் எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தி வெற்றி பெற வேண்டிய சூழலும் உள்ளது.

தற்போது அரசு முடிவெடுத்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் வருகிற 26–ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட நிர்வாகத்தால் குடியரசுதின விழா கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்த முடியாது. அதுபோல் அன்றைய தினம் 225 கிராம ஊராட்சிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள கிராம சபை கூட்டங்கள் நடத்த முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நேற்று ஈரோட்டில் அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி, ஒன்றிய பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. ஆனால், நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், தனியார் பள்ளிக்கூடங்களில் இருந்து ஆசிரியைகளை மாற்று பணியில் ஈடுபடுத்தி பள்ளிக்கூடங்கள் நடத்தப்பட்டன.

ஈரோடு பெரியார் வீதி அரசு தொடக்கப்பள்ளிக்கூடத்தில் நேற்று ஆசிரிய–ஆசிரியைகள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் மாணவ–மாணவிகளும் பள்ளிக்கு வரவில்லை. வெறும் 4 மாணவ–மாணவிகள் மட்டும் வந்திருந்தனர். இந்த பள்ளிக்கூடத்துக்கு மாற்றுப்பணியாக தனியார் பள்ளிக்கூடத்தில் இருந்து 2 ஆசிரியைகள் வந்து இருந்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் தற்காலிக பணியாளர்கள், உயர் அதிகாரிகள் மட்டும் பணியில் இருந்தனர். இதுபோல் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் வெறிச்சோடி கிடந்தன. பொதுமக்கள் பலரும் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தாலுகா அலுவலகங்களில் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணி, ஒன்றிய அலுவலகங்களில் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு சான்றுகள் பெறும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டன.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காவல் துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதேபோல் நம்பியூர், மொடக்குறிச்சி, பெருந்துறை, கோபி, பவானி, சத்தியமங்கலம், கொடுமுடி, தாளவாடி, அம்மாபேட்டை, சிவகிரி, டி.என்.பாளையத்தில் உள்ள வருவாய் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அரசு பள்ளிக்கூட ஆசிரிய–ஆசிரியைகள் போராட்டம் குறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆர்.பாலமுரளி கூறும்போது, ‘‘ஈரோடு மாவட்டத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கூடங்களில் சுமார் 40 சதவீதம் ஆசிரிய–ஆசிரியைகள் பணிக்கு வந்திருக்கிறார்கள். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களில் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை. ஆசிரியர்கள் பணிக்கு வராத பள்ளிக்கூடங்களில் மாற்று ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் கவனிக்கப்பட்டு உள்ளனர். சத்துணவு பணியாளர்கள் பணியில் இருப்பதால் மாணவர்களுக்கு மதிய உணவு முறையாக வழங்கப்படுகிறது’’ என்றார்.

இன்று (புதன்கிழமை) தாலுகா தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.


Next Story