பட்டுக்கோட்டை– காரைக்குடி ரெயிலை மதுரை வரை நீட்டிக்க வலியுறுத்தல்
பட்டுக்கோட்டை–காரைக்குடி ரெயிலை மதுரை வரை நீட்டிக்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
காரைக்குடி,
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் காரைக்குடி வட்ட கிளை கூட்டம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். செயலாளர் வீரராகவன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
காதர் இப்ராஹிம் சிறப்புரையாற்றினார். அய்யப்பன் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:– ஊதியக்குழு நிலுவைத்தொகையை ஓய்வூதியர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் செட்டிநாடு பகுதியில் விமான நிலையம் அமைக்க வேண்டும். காரைக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
பட்டுக்கோட்டை–காரைக்குடி வரை இயங்கும் ரெயில் சேவையை மதுரை வரை நீட்டிக்க வேண்டும். காரைக்குடி பகுதிகளில் வட்டப்பேருந்துகளை இயக்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.