மது அருந்த பணம் தர மறுத்த வாலிபரை கொன்ற 2 பேருக்கு ஆயுள் விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு
விருதுநகர் அருகே மது அருந்த பணம் தர மறுத்த வாலிபரை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விருதுநகர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள பாலவநத்தத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 36). இவரிடம் கடம்பன்குளத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 30), காளிமுத்து (52) ஆகிய இருவரும் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 6–ந்தேதி மது அருந்த பணம் கேட்டுள்ளனர். மூர்த்தி பணம் தர மறுக்கவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து முத்துப்பாண்டியும், காளிமுத்துவும் சேர்ந்து மூர்த்தியை அடித்து கீழே தள்ளி தலையில் கல்லைப் போட்டனர். படுகாயத்துடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மூர்த்தி அங்கு மார்ச் 12–ந்தேதி இறந்தார். அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் முத்துப்பாண்டி, காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விருதுநகர் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி பரிமளா குற்றம் சாட்டப்பட்ட முத்துப்பாண்டி, காளிமுத்து ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.