கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 10 பேர் பிடிபட்டனர்
கடலூர் மாவட்ட கடல் பகுதியில் நேற்று நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் தீவிரவாதிகள் போல் ஊடுருவிய 10 பேர் பிடிபட்டனர்.
கடலூர் முதுநகர்,
மும்பை தாக்குதலுக்கு பிறகு கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் அவ்வப்போது கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சியை கடலோர பாதுகாப்பு குழுமம், இந்திய கப்பல் படை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் நடத்தி வருகின்றன.
அந்த வகையில் நேற்று காலை 6 மணிக்கு இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது. இதற்கு ‘சீ விஜில் ஆபரேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்ச்சி இந்தியா முழுவதும் உள்ள 13 கடலோர மாநிலங்களில் நடந்து வருகிறது.
இதன்படி தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் இந்த பாதுகாப்பு ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் சங்கீதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவகுருநாதன், கார்த்திகேயன், ரமேஷ், பாஸ்கரன், கோதண்டராமன், ஞானசேகரன் மற்றும் போலீசார் 3 படகுகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரையோரங்களிலும் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது காலை 8.15 மணி அளவில் நல்லவாடு அருகே பெரிய பைபர் படகில் 3 பேர் சந்தேகமான முறையில் கடற்கரையோரம் வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் தீவிரவாதிகள் போல் ஊடுருவிய சென்னை கமாண்டோ படைவீரர்கள் மற்றும் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மாயாண்டி, மயில்சாமி, பாரதி ஆகிய 3 பேர் என்றும், அவர்கள் கடலூர் துறைமுகம், செம்மங்குப்பம் தனியார் படகுகள் நிறுத்துமிடத்தை வெடி குண்டு வைத்து தகர்க்க போவதாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் கடலூர் துறைமுகத்தில் இருந்து 7 பேர் புதுச்சேரி நோக்கி படகில் செல்ல முயன்றனர். அவர்களையும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்த அருண், அடில்ராஜா, இந்திய கப்பல் படை வீரர்கள் ஷிண்டே, அமித்கோஷ், மோகித்குமார், அனுப், நைனா பிரசாத் ஆகிய 7 பேர் என்றும், அவர்கள் புதுச்சேரி ஆரோவில், பிரெஞ்சு கதிட்ரல் தேவாலயம் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு வைத்து தகர்க்க வந்ததாகவும் கூறினர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 7 போலி வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 150 கிராம் போலி வெடி மருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த பாதுகாப்பு ஒத்திகை இன்று (புதன்கிழமை) இரவு 8 மணி வரை தொடர்ந்து நடைபெறும் என்று கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story