கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பா.ஜனதா தலைவர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டாரா? விசாரணை நடத்த தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்


கார் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட பா.ஜனதா தலைவர் கோபிநாத் முண்டே கொலை செய்யப்பட்டாரா? விசாரணை நடத்த தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Jan 2019 5:10 AM IST (Updated: 23 Jan 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

கார் விபத்தில் உயிரிழந்த மத்திய மந்திரி கோபிநாத் முண்டே கொல்லப்பட்டதாக இணைய நிபுணர் சையது சுஜா கூறியிருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

மும்பை,

2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்தவர்களில் ஒருவரான சையது சுஜா என்ற இணைய நிபுணர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

இவர் லண்டனில் இருந்து ‘ஸ்கைப்’ மூலமாக இந்திய பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில்,“ 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்களை வடிவமைத்த குழுவில் நானும் இருந்தேன், அந்த எந்திரங்களில் தில்லுமுல்லு நடத்தப்பட்டது.

இந்த வி‌ஷயத்தை தெரிந்துகொண்ட பா.ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே, சாலை விபத்து என்ற பெயரில் கொல்லப்பட்டார். அதை ‘கொலை’ என்று வழக்கு பதிய முயன்ற என்.ஐ.ஏ. அதிகாரியும் கொல்லப்பட்டார். என் குழுவினரும் கொல்லப்பட்டதால், நான் பயந்துபோய் நாட்டை விட்டு வெளியேறினேன்” என பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்டதாக அவர் கூறிய பா.ஜனதா தலைவர் கோபிநாத் முண்டே மராட்டியத்தை சேர்ந்தவர்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசில் மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். சில நாட்களிலேயே டெல்லியில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் இணைய நிபுணர் சையது சுஜா வெளியிட்ட பகீர் தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய இருக்கிறது.

இதுபற்றி கோபிநாத் முண்டேயின் உறவினரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த மராட்டிய மேல்-சபை எதிர்க்கட்சி தலைவருமான தனஞ்செய் முண்டே தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கோபிநாத் முண்டேயின் தலைமையை பின்பற்றியவர்களும், நேசித்த அனைவரும் அவரது மரணம் குறித்து அப்போதே கேள்வி எழுப்பினர். தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

இந்த குற்றச்சாட்டு மீது உடனடியாக கவனத்தை செலுத்தி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது இந்திய உளவு அமைப்பான “ரா” மூலம் விசாரணை நடத்தவேண்டும். ஏனெனில் இது மக்கள் செல்வாக்கு மிக்க தலைவரின் மரணத்துடன் நேரடி தொடர்பு கொண்ட புகார் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மற்றொரு டுவிட்டர் பதிவில், “கோபிநாத் முண்டேவை நேசித்த அனைவருக்கும் அவரது உயிரிழப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது ஒரு நாசவேலை என்பது உறுதியாகி உள்ளது” என்று தனஞ்செய் முண்டே குறிப்பிட்டு உள்ளார்.

Next Story