ஆம்பூர் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதி 2 மாணவர்கள் பலி மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து
ஆம்பூர் அருகே பழுதாகி நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆம்பூர்,
வேலூர் மாவட்டம் மாதனூர் அருகே உள்ள பணந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் சந்தோஷ் (வயது 20). இவர், ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் வக்கீலுக்கு(எல்.எல்.பி.) படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பாண்டு மகன் சந்துரு (18). பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். நண்பர்களான 2 பேரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் ஆம்பூரில் இருந்து மாதனூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
மாதனூர் தோட்டாளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே சென்ற போது சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.