பாக்கம்பாளையம் கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 32 பேர் காயம் வேடிக்கை பார்த்த போது சம்பவம்


பாக்கம்பாளையம் கிராமத்தில் காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 32 பேர் காயம் வேடிக்கை பார்த்த போது சம்பவம்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 23 Jan 2019 7:02 PM IST)
t-max-icont-min-icon

பாக்கம்பாளையம் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த 32 பேர் காயம் அடைந்தனர்.

அணைக்கட்டு, 

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்துள்ள பாக்கம்பாளையம் கிராமத்தில் காளை விடும் விழா நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, ஆம்பூர் தாசில்தார் சுஜாதா ஆகியோர் காளை விடும் விழாவை தொடங்கி வைத்தனர். வருவாய் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் பாரதி, நிர்வாக குழு தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்–இன்ஸ்பெக்டர்கள் நரசிம்மன், ராஜேந்திரபிரசாந்த் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கால்நடை மருத்துவர்கள் மாரிமுத்து, ரமேஷ், நவீன்குமார் ஆகியோர் காளைகளை பரிசோதித்தனர்.

வாணியம்பாடி, காட்பாடி, குடியாத்தம், ஒடுகத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 100–க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கோவில் மீதும் மாடி வீடுகளின் மீதும் அமர்ந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

இளைஞர்களின் ஆரவாரத்தில் தெருவில் ஓடிய காளைகள் மிரண்டு போய் குறுக்கும் நெடுக்குமாக ஓடின. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை காளைகள் முட்டியது. இதில் 30 பேர் காயமும், 2 பேர் படுகாயமும் அடைந்தனர்.

இதனையடுத்து படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு காளை விடும் விழாவில் முகாமிட்டிருந்த மருத்துவர் அஜய் மற்றும் சுகாதார குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

காளை விடும் விழாவில் வேகமாக ஓடிய போது நிலைதடுமாறி கீழே விழுந்த 4 காளைகளுக்கும் காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை பாக்கம்பாளையம் கிராம வாலிபர்கள் செய்திருந்தனர்..


Next Story