5 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் 2,114 பேர் கைது


5 இடங்களில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் 2,114 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 23 Jan 2019 10:16 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் ஜாக்டோ - ஜியோ சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 2,114 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி, 

தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். அதன்படி நேற்று 2-வது நாளாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணாசிலை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாதப்பன், நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தியோடர் ராபின்சன், மாநில சட்ட செயலாளர் நந்தகுமார், ஆசிரியர் முன்னேற்ற கழகம் நிர்வாகி அன்பரசன் ஆகியோர் பேசினார்கள்.

இதில், சி.பி.எஸ்-ஐ ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும். பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். 21 மாத நிலுவை தொகை உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து அண்ணா சிலை எதிரே உள்ள சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் சுமார் 15 நிமிடங்கள் அமர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 423 பெண்கள் உள்பட 753 பேரை கைது செய்தனர்.

இதே போல், ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, ஓசூர், தேன் கனிக்கோட்டை உள்பட சாலை மறியலில் ஈடுபட்ட 1,209 பெண்கள் உள்பட 2,114 பேரை போலீசார் கைது செய்து, அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங் களில் அடைத்தனர்.

தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பணிபுரியும் ஆசிரியர்கள் 95 சதவீத பேரும், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பணிபுரியும் ஆசிரியர்கள் 80 சதவீதம் பேரும் பள்ளிகளுக்கு செல்லவில்லை. தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். இதே போல் அரசு ஊழியர்கள் 100 சதவீத வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story