மோட்டார் சைக்கிளில் சென்றபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்த 2 வாலிபர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது நிலைதடுமாறி சாலையில் விழுந்த 2 வாலிபர்கள் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஏ.மழவராயனூர் காலனியை சேர்ந்தவர் வேல்மயில். இவரது மகன் குபேந்திரன் (வயது 25). இவரும் அதே பகுதியை சேர்ந்த பழனிவேல் மகன் மணிகண்டன்(20) என்பவரும் சொந்த வேலை காரணமாக நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் ஆசனூர் சென்றனர். அங்கு அவர்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் ஏ.மழவராயனூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை குபேந்திரன் ஓட்டினார்.
ஆசனூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது, ஏ.மழவராயனூர் பகுதியை சேர்ந்த மாணவிகள் 3 பேர், பள்ளிக்கூடம் முடிந்ததும் சைக்கிள்களில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மாணவியின் சைக்கிள் மீது குபேந்திரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த குபேந்திரன், மணிகண்டன் ஆகியோர் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தவறி விழுந்தனர்.
அந்த சமயத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி சாலையில் விழுந்து கிடந்த குபேந்திரன், மணிகண்டன் ஆகியோர் மீது ஏறியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற மாணவி சாலையோரம் விழுந்ததால் சிறு காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பிணமாக கிடந்த குபேந்திரன், மணிகண்டன் ஆகியோரது உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேர் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் கம்பத்தூர்பட்டியை சேர்ந்த சின்னசாமி(47) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி சக்கரத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story