திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் சாலை அமைக்கும் எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு


திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் சாலை அமைக்கும் எந்திரங்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 23 Jan 2019 10:45 PM GMT (Updated: 23 Jan 2019 6:41 PM GMT)

திருவாரூர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்காமல் எடுத்து செல்லப்பட்ட எந்திரங்கள், லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை இரு வழிச்சாலையாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு கடந்த ஒரு ஆண்டுகளாக கிடப்பில் போடப் பட்டது.

இதனால் சாலை கடுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் விபத்து அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

சாலையை சீரமைக்க வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட மக்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு முதற் கட்டமாக சேதமடைந்த சாலையை சீரமைக்க ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சாலை சீரமைப்பு பணிகளை தொடங்கியது. இதற்காக திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதிகளில் எந்திரங்கள், லாரிகளை நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில் சாலையை சீரமைக்காமல் ஒப்பந்த நிறுவனம் வாகனங்களை வேறு பணிகளுக்காக எடுத்து செல்ல முயன்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த அப்பகுதி மக்கள் வாகனங்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை சீரமைத்தால் மட்டுமே வாகனங்களை செல்ல அனுமதிப்போம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி பர பரப்பாக காணப்பட்டது.

Next Story