சென்னை சேத்துப்பட்டில் குப்பை தொட்டியில் கண்டெடுத்த ரூ.13 லட்சம் செல்லாத நோட்டுகள் மாற்ற முயற்சித்த பேப்பர் பொறுக்கும் தொழிலாளி கைது
சென்னை சேத்துப்பட்டில் குப்பை தொட்டியில் கண்டெடுத்த ரூ.13 லட்சம் செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கு முயற்சித்த பேப்பர் பொறுக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
சென்னை ஓட்டேரி எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி (வயது 48). இவர், குப்பை தொட்டிகளில் பழைய பேப்பர் மற்றும் பொருட்களை சேகரித்து அவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.
நேற்று முன்தினம் சென்னை சேத்துப்பட்டு ரெயில்வே மேம்பாலத்துக்கு கீழே உள்ள குப்பை தொட்டியில் பழைய பேப்பர் மற்றும் பொருட்களை சேகரித்துக்கொண்டு இருந்தார்.
அதற்குள் கத்தை கத்தையாக ரூ.500 மற்றும் ரூ.1,000 செல்லாத நோட்டு கட்டுகள் கிடந்தன. அதை பார்த்து அந்தோணி இன்ப அதிர்ச்சி அடைந்தார். ஒரு நிமிடத்தில் லட்சாதிபதியாகி விட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். ரூபாய் நோட்டுகளை எண்ணி பார்த்தபோது ரூ.13 லட்சம் இருந்தது. அந்த ரூபாய் நோட்டுகளை தனது வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.
அவற்றை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இதுபற்றி தலைமை செயலக காலனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன் மேற்பார்வையில், தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி போலீஸ் படையோடு அந்தோணி வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினார்.
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.13 லட்சம் செல்லாத நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினார்கள். செல்லாத நோட்டுகளை பதுக்கி வைத்து அவற்றை சட்டவிரோதமாக மாற்ற முயற்சித்ததாக அந்தோணி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். அந்தோணி வீட்டில் கைப்பற்றப்பட்ட செல்லாத நோட்டுகள் ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story