மயிலாடுதுறை பகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,170 பேர் கைது


மயிலாடுதுறை பகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் 1,170 பேர் கைது
x
தினத்தந்தி 23 Jan 2019 11:00 PM GMT (Updated: 23 Jan 2019 7:02 PM GMT)

மயிலாடுதுறை பகுதியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து 1,170 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் எதிரே கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் போராட்ட குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 145 பேரை கைது செய்தனர்.

இதேபோல குத்தாலத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் சாமி மனோகரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர்கள் மகேஷ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக குத்தாலம் தாலுகா அலுவலகத்தில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊர்வலமாக சென்று குத்தாலம் பஸ் நிலையத்தை அடைந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 220 பேரை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழியில் நேற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மயிலாடுதுறை-சிதம்பரம் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரேமசந்திரன், தமிழ்நாடு அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் அசோக்குமார், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி காசிஇளங்கோவன், பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கோவிநடராஜன், ஆசிரியர் மன்ற நிர்வாகி செல்வம், தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சேகர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கிட் தலைமையில் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்ட தலைவர் மாரி தட்சிணாமூர்த்தி, வட்ட செயலாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் வரவேற்றார். போராட்டத்தில் ஓவிய ஆசிரியர்கள் சங்க தலைவர் ராஜாராமன், உடற்கல்வி இயக்குனர்கள் சங்க தலைவர் செல்வகணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 130 பெண்கள் உள்பட 305 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளில் 2-ம் நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் வருவாய்த்துறை, கல்வித்துறை பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். மேலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story