புதுக்கோட்டையில் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 2,600 பேர் கைது


புதுக்கோட்டையில் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 2,600 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 1:26 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2,600 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலங்குடி,

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் நேற்று முன்தினம் முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டம் தொடங்கியது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், இந்துசமய அறநிலையத்துறை அலுவலகங்கள் உள்பட பல அரசுத்துறை அலுவலகங்கள் பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சொடி காணப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 இடங்களில் ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று 2-வது நாளாக வட்டார அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து அதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக புதுக்கோட்டை பொதுவளாகம் முன்பு நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து நேற்று ஜாக்டோ- ஜியோ சார்பில் பழைய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 310 பேரை கைது செய்து பஸ், வேனில் ஏற்றி சென்று தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆலங்குடி பஸ் நிலையம் அருகே நூற்றுக்கணக்கான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து ராமநாதன் செபஸ்தியான், ரெங்கசாமி தலைமையில், ஊர்வலமாக கோஷம் எழுப்பிக் கொண்டே வந்து அரச மரம் பஸ் நிறுத்தத்தில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து மறியலில் ஈடுபட்ட 465 பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றி அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆவுடையார்கோவிலில் ஜாக்டோ-ஜியோ சார்பில் தமிழ்நாடு தொன்கப்பள்ளி ஆசிரியர் மன்ற முன்னாள் வட்டார செயலாளர் வீரசேகரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 170 பேரை ஆவுடையார் கோவில் போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கீரனூரில் காந்தி சிலை முன்பு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சுப்ரமணி தலைமையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 400 பேரை கீரனூர் போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பொன்னமராவதியில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மணிக்குமார், லாசர், திருப்பதி, மாணிக்கம், குமார், ஆகியோர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 175 பேரை பொன்னமராவதி போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கள வைத்தனர்.

விராலிமலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜான் சவுந்தரராஜன் தலைமையில், ஊராட்சி ஒன்றிய அலுவலத்திலிருந்து ஊர்வலமாக சென்று விராலிமலை சுங்கச்சாவடியில் பஸ் நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 268 பேரை கைது செய்து கடைவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 280 பேரை போலீசார் கைது செய்தனர். மணமேல்குடியில் 175 பேரும், கறம்பக்குடியில் 147 பேரும், திருமயம், கந்தர்வகோட்டை உள்பட மாவட்டத்தில் மொத்தம் 12 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 2,600 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story