மலம்பட்டி கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர் மின்மாற்றியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


மலம்பட்டி கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் கருகும் நெற்பயிர் மின்மாற்றியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் இல்லாமல் நெற்பயிர் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆவூர்,

விராலிமலை ஒன்றியம், ஆவூர் அருகே மலம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலம்பட்டி உள்பட விராலிமலை ஒன்றிய பகுதிகளில் கடந்த சில வருடங்களாக சரிவர பருவமழை பெய்யாததால், குளம், குட்டைகள் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீரை மின்மோட்டார்கள் மூலம் எடுத்து குறைந்த அளவில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு மலம்பட்டியில் மாத்தூர்-இலுப்பூர் சாலையோரத்தில் உள்ள பழைய மின்மாற்றியில் இருந்து அதிக எண்ணிக்கையிலான விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த பழைய மின் மாற்றியில் இருந்து குறைந்த மின்அழுத்தம் வருவதன் காரணமாக விவசாய கிணறுகளில் உள்ள மின்மோட்டார்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு வந்தது. இதை தவிர்க்க தெற்கு மலம்பட்டியில் புதிதாக ஒரு மின்மாற்றி அமைத்து விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பை பிரித்து கொடுக்குமாறு மின்சார வாரிய அலுவலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி விவசாயிகள் மனு அளித்தனர். அதன்பேரில் அங்கு புதிய மின்மாற்றி அமைக்க கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு மின்கம்பங்கள் நடப்பட்டு, மின்கம்பிகளும் இழுத்து வைக்கப்பட்டது. ஆனால் மின்மாற்றிக்கான உபகரணங்கள் எதுவும் வைக்க வில்லை. இதனால் இதுவரை விவசாய கிணறுகளுக்கு மின்வினியோகம் வழங்கப்படவில்லை.

இதனால் அங்குள்ள விவசாயிகள் தங்களது வயலில் நடவு செய்துள்ள நெற்பயிர்களுக்கு சீராக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி காய்ந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோரிடம் பலமுறை மனுகொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தெற்கு மலம்பட்டியில் உள்ள மின்மாற்றியை உபகரணங்களை வைத்து சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story