அமைச்சர் நிலோபர்கபில்-அன்வர்ராஜா எம்.பி. மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்


அமைச்சர் நிலோபர்கபில்-அன்வர்ராஜா எம்.பி. மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Jan 2019 4:30 AM IST (Updated: 24 Jan 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் நிலோபர் கபில், அன்வர் ராஜா எம்.பி. உள்ளிட்டவர்கள் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மதுரை வக்பு வாரிய கல்லூரி பணி நியமன முறைகேடு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சர்தார்பாஷா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

மதுரை,

மதுரை வக்பு வாரிய கல்லூரியில் கடந்த 2017-ம் ஆண்டில் உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த பணிகளில் நியமிக்கப்படுவதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளது. இந்த தொகை கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், வக்பு வாரியத்தலைவரும், எம்.பி.யுமான அன்வர்ராஜா, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் நிலோபர் கபில் உள்ளிட்டவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட பணிகளில் நியமிக்கப்பட்டு உள்ளவர்களில் பலர், பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி உரிய தகுதிகளை பெறவில்லை. இருப்பினும் அவர்களுக்கு அமைச்சர் நிலோபர் கபில், வக்பு வாரியத்தலைவர் அன்வர் ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுக்கொண்டு இந்த பணிகளை வழங்கியுள்ளனர்.

இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரி மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மதுரை வக்பு வாரிய கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பணி நியமனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை முடிவில், “வக்பு வாரிய கல்லூரி பணி நியமன முறைகேடு பற்றி கடந்த நவம்பர் மாதமே மனுதாரர் சார்பில் சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவை தமிழக தலைமை செயலாளருக்கு சி.பி.ஐ. அனுப்பி உள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. மனுதாரர் சமர்ப்பித்துள்ள ஆவணங்களை பார்க்கும்போது அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கான முகாந்திரம் இருப்பது தெரிகிறது. எனவே பணி நியமன முறைகேடு குறித்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கை 6 மாதத்தில் சி.பி.ஐ. போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும்“ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story