8 இடங்களில் மறியல் செய்த 2,509 பேர் கைது - 517 பள்ளிகள் மூடப்பட்டன
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடரும் நிலையில் நேற்று 8 இடங்களில் மறியல் செய்த 2,509 பேர் கைது செய்யப்பட்டனர். 517 பள்ளிகள் மூடப்பட்டன.
விருதுநகர்,
ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர். விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,770 ஆசிரியர்களில் 780 பெண்கள் உள்பட 4,635 பேர் வேலைக்கு வரவில்லை. மொத்த ஆசிரியர்களில் இவர்கள் 43 சதவீதம் ஆவர். இதனால் மொத்தம் உள்ள 1,501 பள்ளிகளில் 517 பள்ளிகள் மூடப்பட்டன. அரசு ஊழியர்களில் 9.1 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மொத்தமுள்ள 14,362 அரசு ஊழியர்களில் 607 பெண்கள் உள்பட 1,489 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் அரசு அலுவலகங்களில் ஓரளவு பணி பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் வேலை நிறுத்தம் செய்யும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பெண்கள் உள்பட 230 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசியில் 128 பெண்கள் உள்பட 263 பேரும், சாத்தூரில் 143 பெண்கள் உள்பட 220 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 340 பெண்கள் உள்பட 417 பேரும், ராஜபாளையத்தில் 106 பெண்கள் உள்பட 180 பேரும், வெம்பக்கோட்டையில் 164 பெண்கள் உள்பட 260 பேரும், அருப்புக்கோட்டையில் 394 பெண்கள் உள்பட 656 பேரும், காரியாபட்டியில் 172 பெண்கள் உள்பட 273 பேரும் என ஆக மொத்தம் 1,587 பெண்கள் உள்பட 2,509 பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்றும் மாவட்டம் முழுவதும் 8 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story