நடத்தையில் சந்தேகம் , மனைவியை கொன்ற தொழிலாளி கைது
குண்டடம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள மரவாபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41) கூலித்தொழிலாளி. இவரது மனைவி துளசிமணி (38). இவர்களுக்கு பூங்கொடி (19) என்ற மகளும், 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் செந்தில்குமாருக்கு மனைவி துளசிமணியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி, இரவு 11 மணிக்கு துளசிமணியும் அவரது மகள், மகன் ஆகியோரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது செந்தில்குமார் மது அருந்திவிட்டு, போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் துளசிமணியிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், வழக்கம் போல் செந்தில்குமார் மனைவியிடம் தகராறு செய்வதாக நினைத்து கொண்டனர். இந்த நிலையில் செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால், துளசிமணியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கத்தியை அதே இடத்தில் போட்டுவிட்டு, தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.
அதுவரை வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த செந்தில்குமாரின் மகனும், மகளும் நீண்ட நேரமாகியும் தாயாரை காணவில்லையே என்று நினைத்து, வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது துளசிமணி கொலை செய்யப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து, அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்தவர்கள் ஓடிவந்தனர். பின்னர் இதுகுறித்து குண்டடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து செந்தில்குமாரை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று செந்தில்குமார் பதுங்கி இருக்கும் இடம் பற்றி, தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். மனைவியை கொலை செய்தது பற்றி அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story