வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 கால்களும் செயல் இழந்தவருக்கு ரூ.87 லட்சம் இழப்பீடு


வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 கால்களும் செயல் இழந்தவருக்கு ரூ.87 லட்சம் இழப்பீடு
x
தினத்தந்தி 24 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வேன்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 கால்களும் செயல் இழந்தவருக்கு ரூ.87 லட்சம் இழப்பீடு பெறுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலமாக சமரச தீர்வு காணப்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்தவர் குணால் ஜெயின்(வயது 24). இவர் அப்பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய நண்பர் மகேந்திரன்(20). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பல்லடம் அருகே செம்மிபாளையம் பிரிவு அருகே கடந்த 28-3-2015 அன்று சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். குணால் ஜெயின் படுகாயம் அடைந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர்பிழைத்தார். ஆனால் இந்த விபத்தில் குணால் ஜெயினுக்கு 2 கால்களும் செயல்படாமல் முழுமையாக பாதிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மகேந்திரன், குணால் ஜெயின் ஆகியோரின் பெற்றோர் விபத்து இழப்பீடு தொகை கேட்டு திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நீதிபதி முகமது ஜியாபுதீன் முன்னிலையில் நடந்தது. விபத்து காரணமான சரக்கு வேனுக்கு சோழ மண்டலம் ஜெனரல் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் அந்த காப்பீட்டு நிறுவனத்தின் தரப்பில் வந்து வழக்கை நடத்தினார்கள்.

பின்னர் சமரச முறையில் தீர்வு காண இருதரப்பினரும் முடிவு செய்தனர். அதன்படி திருப்பூரில் உள்ள தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக சமரச தீர்வு காணப்பட்டது. அதில் குணால் ஜெயினின் பெற்றோருக்கு ரூ.87 லட்சமும், மகேந்திரன் பெற்றோருக்கு ரூ.17 லட்சமும் விபத்து இழப்பீடாக வழங்க காப்பீட்டு நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இதைத்தொடர்ந்து குணால் ஜெயின் மற்றும் மகேந்திரன் பெற்றோருக்கு இழப்பீடு தொகை பெறுவதற்கான உத்தரவை திருப்பூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி அல்லி, 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாபுதீன் ஆகியோர் நேற்று லட்சுமி நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் வழங்கினார்கள்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வக்கீல் பாலகுமார் ஆஜராகி வாதாடினார். 

Next Story