சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேர் கைது போக்குவரத்து மாற்றம்
சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
வேலூர்,
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
போராட்டத்தின் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களில் சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதையடுத்து மாவட்ட தலைநகரில் நேற்று ஜாக்டோ–ஜியோ அமைப்பை சேர்ந்தவர்கள் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலையிலேயே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரத்தொடங்கினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் வாடகைக்கு வாகனங்கள் எடுத்து வந்தனர். நேரம் செல்ல செல்ல போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
மறியலை முன்னிட்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகநாதன், பிரகாசம், கலைச்செல்வன் ஆகியோர் தலைமையில் 100–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ஆயுதபடை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் நடந்த இடத்தில் பல்வேறு குழுக்களாக அவர்கள் பிரிந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில் காலை 11.30 மணி அளவில் அவர்கள் மேம்பாலத்தின் கீழ் வந்தனர். அவர்களை சாலை தடுப்புகளை கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் போராட்டகாரர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால் போலீசாரால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதையடுத்து மேம்பாலத்தின் கீழ் மற்றும் சர்வீஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் கலைந்து செல்லாமல் கோரிக்கைகளை முழக்கமிட்டு கோஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்யத் தொடங்கினர். மறியல் நடைபெறும் இடத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனங்கள் ஒன்றன் பின், ஒன்றாக வரவழைக்கப்பட்டது. அதில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்து வள்ளலாரில் உள்ள 3 திருமண மண்டபங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர் போலீசார் அவர்களை கைது செய்து, திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த மறியல் காரணமாக சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் போக்குவரத்தை மாற்றிவிட்டனர். அதன்படி வள்ளலாரில் இருந்து வேலூருக்கு வந்த வாகனங்கள் ஆர்.டி.ஓ. சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விடப்பட்டது. தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் கிரீன் சர்க்கிள்– கலெக்டர் அலுவலகம் இடைப்பட்ட பகுதியில் சர்வீஸ் சாலையில் இறங்கி வேலூர் நோக்கி சென்றது.
இதேபோல வேலூரில் இருந்து சத்துவாச்சாரி சென்ற பஸ் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விடப்பட்டது. இதனால் ஓரளவுக்கு போக்குவரத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். ஆற்காடு சாலையில் வந்த பஸ்கள் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் திருப்பிவிடப்பட்டது. அந்த பஸ்கள் கிரீன் சர்க்கிள் சென்று மீண்டும் சத்துவாச்சாரி செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வந்து தேசிய நெடுஞ்சாலையில் சென்று கலெக்டர் அலுவலகத்தை கடந்தது.
சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ–ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அமர்நாத், சரவணராஜ், தாண்டவராயன், செ.நா.ஜனார்த்தனன் உள்பட சுமார் 3 ஆயிரம் பேரை கைது செய்தனர்.
போராட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், எங்களது போராட்டத்தால் வேலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தொடக்கப்பள்ளிகள் இயங்கவில்லை. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 70 சதவீதம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அரசு ஊழியர்கள் 60 சதவீதம் பேர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து தலைமை குழு அறிவிப்புக்கு பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றனர்.