புதிய தொழில்முனைவோருக்கு ரூ.30 லட்சம் மானியத்துடன் கடன் உதவி கலெக்டர் மலர்விழி தகவல்
புதிய தொழில்முனைவோருக்கு ரூ.30 லட்சம் வரை மானியத்துடன் கடன் உதவி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தர்மபுரி கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி,
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தமிழக அரசின் சார்பில் முதல் தலைமுறை பட்டதாரிகள், டிப்ளமோ படித்த தொழில் முனைவோருக்காக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் என்ற சுயதொழில் திட்டம் தமிழக முதல்–அமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் 2018–2019–ம் ஆண்டிற்கென 21 நபர்களுக்கு ரூ. 2 கோடியே 10 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற தகுதியுள்ளதாக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட தொழில்களுடன் கூடுதலாக ரிக், கன்டெய்னர் லாரி, ரோடு ரோலர், கான்கிரீட் கலவை எந்திரங்கள், அனைத்து வாயு கலன்களுடனான வாகனங்கள், நடமாடும் உணவகங்கள் போன்ற சேவைத்தொழில்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. லாரிகள், பஸ்கள், வேன்கள், சுற்றுலா வாகனங்கள், ஆட்டோ போன்ற போக்குவரத்து வாகனங்கள், விவசாய தொழில், பண்ணை தொழில் ஆகியவற்றுக்கான எந்திரங்கள், வாகனங்கள், டிராக்டர் போன்றவற்றுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற இயலாது.
இந்த திட்டத்தின் கீழ் திட்ட மதிப்பீடு குறைந்த பட்சம் ரூ.10 லட்சத்திற்கு மேலும் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையும் இருக்கலாம். அனைத்து உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்கலாம். தொழில் முனைவோர் பங்களிப்பாக பொது பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் செலுத்த வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை மானியமும், முறையாக கடனை திருப்பி செலுத்தினால் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இளநிலை பட்டதாரிகளாகவோ, பட்டயம் பெற்றவராகவோ, ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி பெற்றவர்களாகவோ அல்லது அதற்கு மேற்பட்ட கல்வி தகுதி பெற்றவராகவோ இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 21 வயது முதல் 35 வயதுக்குட் பட்டவர்களாகவும், சிறப்பு பிரிவினர் அதிகபட்சம் 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் கலெக்டர் தலைமையிலான தேர்வுக்குழுவினரால் நேர்முகத்தேர்வின் மூலம் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த திட்டத்தின்படி 2018–19–ம் ஆண்டிற்கான மானிய கடன் உதவியை பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு தர்மபுரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை அணுகலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் மலர்விழி தெரிவித்து உள்ளார்.