விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: வயலில் படுத்து விவசாயிகள் போராட்டம் 15 பெண்கள் உள்பட 77 பேர் கைது


விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு: வயலில் படுத்து விவசாயிகள் போராட்டம் 15 பெண்கள் உள்பட 77 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:00 AM IST (Updated: 24 Jan 2019 9:31 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை அருகே விவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வயலில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 77 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னிமலை, 

திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகில் உள்ள ராசிபாளையம் என்ற பகுதியில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி என்ற பகுதி வரை 195 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.670 கோடி மதிப்பில் 564 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்து 400 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்வதற்கு கடந்த 2014-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன் பிறகு மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதுவரை 516 மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இன்னும் 48 மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது.

இதில், ஈரோடு மாவட்டத்தில் 15 மின் கோபுரங்களும், திருப்பூர், சேலம், தர்மபுரி மாவட்டத்தில் 33 மின் கோபுரங்களும் அடங்கும். விவசாய நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் பலவிதமான போராட்டங்கள் நடத்தியதால் இந்த பணிகள் நிறைவு பெறாமல் இருந்தது.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முதலியாக்கவுண்டன்வலசு என்ற கிராமத்தில் உள்ள குப்பன் என்பவரின் விவசாய நிலத்தில் நேற்று மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்காக பொக்லைன் எந்திரத்துடன் மின்வாரிய அதிகாரிகள் அங்கு வந்தனர். இதையொட்டி அங்கு பெருந்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார், ஈரோடு ஆயுதப்படை துணைபோலீஸ்சூப்பிரண்டு சேகர் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல் (அறச்சலூர்), மணிகண்டன் (கொடுமுடி) மற்றும் நூற்றுக்கணக்கான ஆண், பெண் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு மின் கோபுரம் அமைக்கும் இடத்துக்கு வந்தனர். உடனே அவர்கள் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ‘எங்கள் நிலத்தை காப்போம். விவசாய நிலங்களில் மின் கோபுரம் அமைக்க விடமாட்டோம்,’ என கோஷங்கள் எழுப்பினர். அங்கிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலீசாரின் சமாதானத்தை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் கொங்கு ராஜாமணி, பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் வி.பி.குணசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள், திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பொன்னுசாமி, மார்க்சிஸ்டு கட்சியின் சென்னிமலை ஒன்றியசெயலாளர் ரவி உள்பட ஏராளமான விவசாயிகள் மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்ற இடத்துக்கு வந்தனர். உடனே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 15 பெண்கள் உள்பட மொத்தம் 77 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வெள்ளோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைக்க பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குழி தோண்டும் பணி நடைபெற்றது. மின் கோபுரங்கள் அமைக்கும் விவசாய நிலத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story