ஈரோட்டில் லாரி மோதி மொபட் தீப்பிடித்தது தொழிலாளி படுகாயம்


ஈரோட்டில் லாரி மோதி மொபட் தீப்பிடித்தது தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 25 Jan 2019 3:30 AM IST (Updated: 24 Jan 2019 9:41 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் லாரி மோதி மொபட் தீப்பிடித்ததில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

ஈரோடு, 

ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று காலை சேகர் தனது மொபட்டில் ஈரோடு தினசரி காய்கறி மார்க்கெட் நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

பிரப்ரோடு பெரிய மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது, பின்னால் துணி பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவரது மொபட்டின் மீது மோதியது. இந்த விபத்தில் மொபட்டின் பெட்ரோல் டேங்க் உடைந்து திடீரென மொபட் தீப்பிடித்தது.

இதில் சேகரின் உடலிலும் தீ பரவி பற்றி எரிந்தது. இதனால் சேகர் வலி தாங்க முடியாமல் அலறித்துடித்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சேகரின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டனர். எனினும் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் லாரியின் சக்கரத்தில் சிக்கி மொபட் அப்பளம் போல் நொறுங்கியதுடன், அது தீயில் எரிந்து சேதம் அடைந்தது.

இதைத்தொடர்ந்து சேகர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story