விழுப்புரம் அருகே ஆட்டோவில் கடத்திய ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது


விழுப்புரம் அருகே ஆட்டோவில் கடத்திய ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 25 Jan 2019 4:15 AM IST (Updated: 24 Jan 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த வாழப்பட்டு கூட்டுசாலை அருகில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கெடார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த ஆட்டோவில் இருந்த சாக்கு மூட்டைக்குள் பண்டல், பண்டல்களாக பான் மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்ததில் 15 ஆயிரம் பாக்கெட்டுகளில் பான்மசாலாவும், 7,500 பாக்கெட்டுகளில் குட்காவும் இருந்தது.

இதையடுத்து ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும், திருவண்ணாமலை மாவட்டம் சின்னகாங்கேயனூரை சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவராஜ் (வயது 36), வேலு மகன் குமரன் (20) என்பதும் இவர்கள் இருவரும் விழுப்புரம் அருகே காணை பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக திருவண்ணாமலையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஆட்டோவில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து யுவராஜ், குமரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தி வரப்பட்ட ரூ.2½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்புள்ள ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

Next Story